புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மக்கள் தான் எங்களுக்கு முக்கியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதுக்கோட்டை: மக்கள் தான் எங்களுக்கு முக்கியம் என புதுக்கோட்டையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். புதுக்கோட்டையில் நேற்று மாலை நடந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.603.67 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தீட்டப்பட்ட திட்டங்களுக்கு, அதற்கான உத்தரவுகளை அந்த கோட்டையில் பிறப்பித்து அதை நிறைவேற்ற புதுக்கோட்டைக்கு வந்துள்ளேன்.  புதுக்கோட்டையை தனி மாவட்டமாக ஆக்கியவர் மறைந்த முதல்வர் கலைஞர்.

இப்போது புதுக்கோட்டையில் உள்ள 6 தொகுதிகளில், 5 தொகுதிகளை நாம் வென்று அரசின் கோட்டையாக இதுமாறி உள்ளது. எந்த கோட்டையாக இருந்தாலும் அது ஒருநாள் பழைய கோட்டையாக மாறிவிடும். எப்போதும் புதிய கோட்டையாக இருப்பது இந்த புதுக்கோட்டை. ஏழை, எளிய மக்கள் வாழ்க்கை தரம் இந்த ஆட்சி மூலம் உயர்ந்தது என்பதை இந்த ஆட்சியுடைய சாதனையாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏழை, எளிய, விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள், தங்கள் கோரிக்கைக்காக அரசாங்கத்தை சுலபமாக அணுகும் வகையில் அரசு இயந்திரம் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டயலினத்தவர், பழங்குடியினர் சமூக வாழ்க்கை எவ்வளவு மேன்மையடைந்திருக்கிறதோ அதையே சாதனையாக நினைக்கிறேன். இருளர்கள், நரிக்குறவர்கள் சமுதாயத்தை சார்ந்த விளிம்பு நிலை மக்களின் அரசாக செயல்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் குரலற்றவர்களின் குரலாக இந்த அரசு இருக்க வேண்டும். இத்தகைய மக்களின் தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து, சிந்தித்து சிந்தித்து செயலாற்றி வரவேண்டும் என நினைக்கிறேன். வளர்ச்சி என்ற பாதையை டெவலப்மென்ட் என்ற பொதுவான அர்த்தத்தில் சொல்லவில்லை. மாற்றம், மேன்மை, உள்ளார்ந்த வளர்ச்சி என்ற பண்பாட்டு அடையாளத்துடன் சொல்கிறோம்.

ஒரு தொழிற்சாலை உருவாவது வளர்ச்சி. அந்த தொழிற்சாலை வளர்வதன் மூலம் அந்த வட்டாரம் அடையக்கூடிய பயன், வேலைவாய்ப்பு, சமூகத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்தையும் சேர்த்து தான் வளர்ச்சி என்கிறோம். அத்தகைய வளர்ச்சியை உருவாக்க நாங்கள் நினைக்கிறோம். ஒரு பெரும் தொழிற்சாலையை உருவாக்கி, எத்தனை பெண்களுக்கு வேலை கொடுத்துள்ளது, மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்டங்களை எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது ஆக இதைத்தான் இன்றைக்கு கம்பீரமாக சொல்கிறோம். இது தான் திராவிட மாடல் ஆட்சி என்று பெருமையோடு சொல்கிறோம். இதுதான் அதன் உள்ளடக்கம்.

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்வது தான் திராவிட மாடல். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால் அதிகாரத்துக்கு வந்தாக வேண்டும் என்பதை உணர்ந்ததால் தேர்தலில் குதித்த திமுக, மக்கள் தான் எங்களுக்கு முக்கியமே தவிர இப்படிப்பட்ட பதவிகள் அல்ல. எத்தகைய திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை வாக்கு வாங்கும் தந்திரம் என கொச்சைப்படுத்துபவர்கள் சிலர் உள்ளனர். நான் கேட்கிறேன் இருளர்கள், குறவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறதா? அவர்கள் வாக்கு வங்கி உள்ளவர்களா? வாக்கு வங்கி இல்லாதவர்களுக்கும் சேவை செய்வது தான் திமுக அரசு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக அரசின் நோக்கம், சிந்தனை செயல் ஆகிய அனைத்தும் மக்கள் நலன் தான். சாதாரண, ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் தான். எங்களையெல்லாம் உருவாக்கிய பெரியாருடைய மொழியிலே இது மூன்றாம் தர அரசுக்கூட அல்ல நான்காம் தர அரசு. நாங்கள் நான்காவது தரத்தை சார்ந்தவர்கள். ஆகவே நான்காம் தர அரசு நாட்டிலே இருக்கிறது. நான்காம் தர மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபடும் அரசு இது என்ற இறுமாப்பு, கர்வத்தோடு பெரியாருடைய பெயரிலும், பேரறிஞர் அண்ணா பெயரிலும் சொல்லிக் கொள்வதிலே நான் பெருமை அடைகிறேன்.

சமூகநீதி, சமத்துவத்துக்காக தன்னையே அர்பணித்துக்கொண்ட தமிழினத் தலைவர் கலைஞர் எந்த மக்களுக்காக பாடுபட்டாரோ அந்த மக்கள் அரசு தான் இன்று கோட்டையில் நடக்கிறது. அந்த மக்களுக்கான அரசை தொடர்ந்து நடத்துவோம் என்று இங்கு உங்கள் முன்னால் நின்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு பேசிய எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி பிரச்னை, கோரிக்கைகளை சுட்டிக்காட்டினர். சட்டமன்றத்திலும் சரி மக்கள் மன்றத்திலும் சரி எந்த கோரிக்கை வைத்தாலும் அதில் உள்ள உண்மை, நியாயத்தை இந்த அரசு புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: