வெள்ளபுத்தூர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம்: ஜமாபந்தி கூட்டத்தில் தலைவர் மனு

மதுராந்தகம்: வெள்ளபுத்தூர் ஊராட்சியில், அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டிட்தர வேண்டும் என ஊராட்சி தலைவர் பொதுமக்களுகடன் வந்து கோரிக்கை மனு வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ள புத்தூர் ஊராட்சி உள்ளது. இங்கு,  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இதில், ஊராட்சி மன்ற தலைவர் வரதன் மற்றும் துணைத்தலைவர் பா.விஜயகுமார் தலைமையில், ஊராட்சியின் தேவைகளை  வலியுறுத்தி மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில்   நடைபெற்றுவரும் ஜமாபந்தி கூட்டத்தில் நேற்று கிராம மக்கள் சிலருடன் சேர்ந்து மனு அளித்தனர்.

அதில், ஊராட்சியில் வசித்து வரும் 25க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி இன குடும்பத்தினருக்கு அரசு வீட்டுமனைகள் வழங்க வேண்டும், இப்பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கி வரும் பொது பணித்துறைக்கு சொந்தமான இரண்டு பெரிய ஏரிகளில் தற்போது உள்ள மதகுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் புதிய மதகுகள் கட்ட வேண்டும். பல வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ள இந்த ஏரிகள் தூர்ந்து போய் விட்டது. இதனால், தற்போது அதன் நீர் கொள்ளளவு மிகவும் குறைந்துள்ளது.

எனவே, இந்த 2 ஏரிகளையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும். அப்போது, அதில் உள்ள வண்டல் மண்ணை, விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும், ஏரியிலிருந்து விவசாய நிலங்களுக்கு வரும் பாசன கால்வாய்கள் சிமெண்ட் கட்டுமான கால்வாய்களாக மாற்றப்பட்டால் தண்ணீர் சேதமின்றி விவசாயிகளுக்கு கிடைக்கும். எனவே, சிமெண்ட் கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லும் ஓடைகள், சிறு ஓடைகள் ஆகிவற்றில் தடுப்பணைகள் அமைத்து நீர் ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும்.சில இடங்களில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டால் கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் நீர் ஆதாரமாக விளங்கும், எனவே பண்ணைக்குட்டைகள் அமைக்க வேண்டும்.இப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை பிரித்தெடுக்க, உலரவைக்க, இங்குள்ள திரௌபதி அம்மன் கோவில் எதிரில் சிமென்ட் களம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மதுராந்தகம் ஜமாபந்தி அலுவலரிடம் வெள்ள புத்தூர் ஊராட்சி மக்கள் வழங்கினர்.

Related Stories: