கரூரில் பரிதாபம் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை: வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் உருக்கம்

கரூர்: கரூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர், வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் உருக்கமான வாசகத்தை பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகரை சேர்ந்தவர் சத்தியபாமா. இவருக்கு சஞ்சய் (23) என்ற ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன் கணவர் ராஜலிங்கம் பிரிந்து சென்றதால் சத்தியபாமா கூலிவேலைக்கு சென்று இருவரையும் வளர்த்து வந்தார். கேட்டரிங் படித்துள்ள சஞ்சயை, மேற்படிப்பு படிக்க வைக்காத காரணத்தால் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதனால் கிடைத்த வேலைக்கும் சரிவர செல்லாததால் தாய் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சஞ்சய் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதில் அவ்வப்போது பணத்தை சம்பாதிப்பதையும், இழப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்று வந்த இடத்தில் நண்பர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர், சஞ்சயின் ஆன்லைன் ஐடியை ஹேக் செய்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் சஞ்சயின் அக்கவுண்ட்டில் இருந்து ரூ.30ஆயிரம் வரை பறிபோனதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த சஞ்சய், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், \\”டிப்ரசனா இருக்கு. யாரும் கேம் விளையாடாதீங்க. என்னை மாதிரி யாரும் ஏமாறாதீங்க. லைப்ல ஏதாச்சும் அச்சீவ் பண்ணுங்க. கூட இருந்து குழி பறித்தது யாரு?” போன்ற வாசகங்களை பதிவிட்டு தற்கொலை முடிவு எடுத்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: