தொடரும் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்-விவசாயிகள் பரிதவிப்பு

திருக்கனூர் :  திருக்கனூர் அடுத்த செட்டிப்பட்டு, புதுச்சேரி-தமிழக எல்லைப் பகுதியில் உள்ளது. இப்பகுதி மக்கள் முற்றிலும் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். இங்குள்ள விவசாயிகள் நெல், கரும்பு, மரவள்ளி உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது. அங்குள்ள ஏரிக்கரை அருகே 10 ஏக்கருக்கு மேல் வேலிகாத்தான் தோப்பு உள்ளது. அந்த தோப்பில் காட்டுப்பன்றிகள் தங்கி இருப்பதாகவும், அங்கேயே பெருகிக் கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சங்கராபரணி ஆற்றின் ஓரம் உள்ள மலைப்பகுதியில் இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிக்கு பார்வையிட வந்த அப்போதைய கவர்னர் கிரண்பேடியிடம் இப்பகுதி விவசாயிகள் இதுகுறித்து முறையிட்டனர். கவர்னருடன் வந்திருந்த வேளாண் துறை மற்றும் வனத்துறை இயக்குனர்கள் இந்த காட்டு பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

2 ஆண்டுக்கு முன்பு ஒரு பெண், புல் அறுக்க சென்ற போது காட்டுப் பன்றி விரட்டி கடித்துள்ளது. அக்கம்பக்கத்தினர் கூச்சல் போடவே காட்டுப்பன்றி ஓடிவிட்டது. இதேபோல் விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் செட்டிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் தனியாக செல்வதற்கு பயப்படுகின்றனர். 2, 3 பேர் சேர்ந்து  தான் விவசாய வேலைகளுக்கு செல்கின்றனர். தற்போது ஊரை ஒட்டிய பகுதிகளில் மணிலா, மரவள்ளி பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

காட்டுப்பன்றி வராமல் இருக்க நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்து, அதில் சாக்குப்பை, புடவைகளை சுற்றி கட்டி வருகின்றனர். எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அழிந்துவரும் விவசாயத்தை காக்கவும், வனம் மற்றும் விவசாயத்துறை சார்பில் காட்டுப்பன்றிகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: