கம்பம் அருகே சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்-அணிவகுத்த வாகனங்களால் நெரிசல்

உத்தமபாளையம் : கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் பல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால், சாலையில் வாகனங்கள் அணி வகுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை முறைப்படுத்த போக்குவரத்து போலீசார் இல்லாததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

தேனி மாவட்டத்தில், கம்பம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுருளி அருவி உள்ளது. சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் விளங்கும் இந்த அருவிக்கு விடுமுறை தினங்கள், முக்கிய விஷேச தினங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிவர். இங்குள்ள சுருளி வேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. வெயில் கொளுத்துவதாலும், நேற்று விடுமுறை என்பதால் பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நேற்று சுருளி அருவியில் குவிந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர். அருவியில் தண்ணீரும் குறைவாக வந்ததால், சுற்றுலாப் பயணிகள் கியூவில் நின்று குளித்தனர்.

முறைப்படுத்த போலீசார் இல்லை:

சனி, ஞாயிற்று விடுமுறை தினங்களில் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநில வாகனங்களும் அதிகமாக வருகின்றன. அருவியின் உட்புறம் புறக்காவல் நிலையம் இருந்தது. இப்போது மூடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய ராயப்பன்பட்டி போலீசார் கண்டுகொள்வதில்லை. எனவே, தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: