பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 14வது முறையாக நடால் சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன்  கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 14வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் (23வயது, 8வது ரேங்க்) உடன் நேற்று மோதிய நடால் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். அவரது அனுபவ ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய ரூட் எதிர்ப்பின்றி சரணடைய... நடால் 6-3, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று, பிரெஞ்ச் ஓபனில் 14வது முறையாக கோப்பையை முத்தமிட்டார். இந்த போட்டி 2 மணி, 18 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலமாக களிமண் தரை மைதானங்களில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளார் ‘கிங் ஆப் கிளே’ நடால்.அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளர்கள் வரிசையில் பெடரர், ஜோகோவிச் தலா 20 பட்டங்களுடன் 2வது இடத்தில் உள்ள நிலையில், நடால் தனது 22வது பட்டத்தை கைப்பற்றி முன்னிலையை அதிகரித்துக் கொண்டுள்ளார். காயம் காரணமாக சில தொடர்களில் விளையாடாமல் இருந்த பின்னர், மீண்டும் களமிறங்கி கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ள நடாலுக்கு வாழ்த்து மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories: