வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பிளாஸ்டிக் வராமல் தடுக்க நடவடிக்கை; அமைச்சர் மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று அளித்த பேட்டி: பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கில் தான் மீண்டும் மஞ்சள் பை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழக முதல்வர் வெற்றி அடைந்துள்ளார். பிளாஸ்டிக் ஒழிப்பு முதலமைச்சரின் கனவுத் திட்டம். இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் பசுமை நிறைந்த மாநிலமாக மற்ற உயிரினங்கள் பாதிக்காதவாறு மக்கள் வாழ்வதற்கு இயற்கையை பாதுகாப்பதற்கு முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

143 இடங்கள் குப்பைகள் தேங்கி இருப்பது கண்டறியப்பட்டு பயோ மைனிங் முறையில் 59 இடங்களில் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. எஞ்சி இருக்கக்கூடிய இடங்களில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது பிளாஸ்டிக் தயாரிப்பதை குடிசைத் தொழிலாக ஆங்காங்கே செய்து கொண்டுள்ளனர்.

மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியா 2022க்கான போட்டிகள் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. போட்டி நடைபெறுவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 15ம் தேதிக்குள் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: