திருவேற்காடு நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

பூந்தமல்லி: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்னையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து திருவேற்காடு நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சியை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், திடக்கழிவுகளை முறையாக பிரித்து வழங்கும் மக்களுக்கு தள்ளுபடி விற்பனையில் பொருட்கள் பெறுவதற்கான அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் நாசர் பேருந்து நிலையம், சன்னதி தெருக்களில் கைகளால் குப்பைகளை அள்ளி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதில் நகராட்சிகளின் மண்டல இயக்குநர் சசிகலா, மாவட்ட சுகாதார துணை இயக்குநர் ஜவஹர்லால், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் தூய்மை பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும் திருவேற்காடு நகர்மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ் அலுவலகத்தை நகராட்சி வளாகத்தில் அமைச்சர் நாசர் திறந்துவைத்தார். இதில் எம்.பி.ஜெயக்குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் டி.ரமேஷ், நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: