உள்நாட்டு போர் வெடிக்கும் பாகிஸ்தான் 3 ஆக உடையும்: இம்ரான்கான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: அடுத்தாண்டு மார்ச்சுக்குள் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடத்தப்படவில்லை என்றால், உள்நாட்டு போர் வெடிக்கும். நாடு மூன்றாக உடையும்,’ என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால், பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப், புதிய பிரதமராக பதவியேற்றார். தற்போது, பாகிஸ்தானில் விரைவாக தேர்தல் நடத்தும்படி இம்ரான் கான் போராட்டம் நடத்தி வருகிறார்.இந்நிலையில், நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:பாகிஸ்தானில் பிரதமருக்கு முழுமையான அதிகாரம் இல்லை. உண்மையான அதிகார மையம் வேறு இடத்தில் இருக்கிறது. அது எங்கு என்று அனைவருக்கும் தெரியும் (ராணுவம்). அதனால் தான், நான் பிரதமராக இருந்த போது முழுமையான அதிகாரம் என்னிடம் இல்லை. எனது கைகள் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு விஷயத்திலும் பல்வேறு தரப்பால் மிரட்டப்பட்டேன்.

ஆட்சியாளர்கள் அதிகார மையத்தை நம்பி இருக்க வேண்டியதாக உள்ளது. இதனால், எனது தலைமையிலான ஆட்சி மிகவும் பலவீனமாக இருந்தது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியிருந்தது.

ரஷ்யா, சீனா, ஆப்கானிஸ்தான் தொடர்பாக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை முடிவுகள் எடுத்தேன். அதன் காரணமாக எனது ஆட்சியை கவிழ்க்க, அமெரிக்கா தலைமையில் சதித்திட்டம் தீட்டப்பட்டது. அதனால்தான் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைய நேரிட்டது.பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை இழந்தால், 3 துண்டுகளாக உடையும். இந்த நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்றால் நாடு தற்கொலை செய்து கொள்ளும் முடிவை நோக்கி செல்லும். தங்களுக்கு அதிகாரத்தையும் அடித்தளத்தையும் அமைத்து கொடுத்த நாட்டையே அதிகார மையம் இன்று பலவீனமாக்கி உள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் தேர்தலை நடத்த நீதிமன்றத்தை நாடி உள்ளோம். அரசியலமைப்பு, சட்ட ரீதியாக தேர்தலை அனுமதிக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால், உள்நாட்டு போர் ஏற்படும் சூழல் உருவாகும் என்று இம்ரான் கான் கூறினார்.போலீசாருக்கு 3 வாரம் தடை பாகிஸ்தானில் தேர்தல் நடத்த வலியுறுத்தி இம்ரான்கான் கடந்த மாதம் 27ம் தேதி நடத்திய சுதந்திர பேரணியில் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக அவர் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி இம்ரான் தொடர்ந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், அவரை 3 வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது என போலீசாருக்கு  தடை விதித்தது.

Related Stories: