காஞ்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்: 109 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. அதில், மொத்தம் 118 தீர்மானங்களுக்கு109  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகர் வளர்ச்சி குறித்து 118 தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்காக கூட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. அப்போது, உறுப்பினர் சுரேஷ் பேசுகையில், உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் டெண்டர் நடத்தக்கூடாது. தீர்மானங்கள் நிறைவேற்றுவது உறுப்பினர்கள் தான் என்றார். இனிமேல் முறைப்படி டெண்டர் நோட்டீஸ் உறுப்பினர்களுக்கு தரப்படும் என மாநகராட்சி ஆணையாளர் நாராயணன் தெரிவித்தார்.

தொடர்ந்து, உறுப்பினர் சூரியா சோபன்குமார் பேசும்போது, காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் ரூ.75 லட்சத்தில் மேயர் குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், போதுமான நிதியில்லாத போது குடியிருப்பு அவசியம் தானா என கேள்வி எழுப்பினார். அதற்கு சில உறுப்பினர்கள் வேண்டும் என்றும், சிலர் வேண்டாம் என்றும் கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, குடியிருப்பு வேண்டும் என்பவர்கள் மட்டும் கையை தூக்குமாறு மேயர் கேட்டுக் கொண்டார். அதற்கு, பலரும் கையை உயர்த்தி அந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர், மொத்தம் 118 தீர்மானங்களுக்கு109  தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.

Related Stories: