மேலப்பாளையத்தில் காலியாக கிடக்கும் ரயில்வே நிலங்கள் மெமு ரயில் பராமரிப்பு மையம் நெல்லையில் அமைக்கப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: காலமாற்றத்திற்கு ஏற்ப இருபுறமும் இன்ஜின்களை கொண்ட மெமு ரயில்கள் (மெயின் லைன் எலக்ட்ரிக்கல் மல்டிபிள் யூனிட் (MEMU) நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. கொல்லத்தில் மெமு ரயில்களை பராமரிக்கும் பணிமனை உள்ளதால் திருவனந்தபுரம் கோட்டத்தில் இயக்கப்படும் அனைத்து மெமு ரயில்களும் கொல்லத்தை மையமாக வைத்தே இயக்கப்படுகின்றன. நெல்லையை மையமாகக் கொண்டு திருச்செந்தூர் - நெல்லை, செங்கோட்டை - நெல்லை உள்ளிட்ட அனைத்து ரயில்வே தடங்களும் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. எனவே விரைவில் நெல்லையை மையமாகக் கொண்டு மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து நெல்லை வழியாக திருச்செந்தூர் சென்ற பாசஞ்சர் ரயில், மீண்டும் இயக்கப்படும்போது மெமு ரயிலாக மாற்றப்படுமென ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்ஜின் கழற்றி மாற்ற வேண்டிய அவசியம் இல்லாததால், இந்த ரயில் எவ்வித சுணக்கமும் இன்றி திருச்செந்தூர் போய்ச் சேரும். மேலும் திருச்செந்தூர், செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு வரும் பாசஞ்சர் ரயில்களின் இன்ஜின் கடந்த காலங்களில் கழற்றி, மறுமுனையில் மாட்டப்பட்டு அடுத்த ரயிலாக புறப்பட்டுச் சென்றது. இதற்காக ஒரு பிளாட்பாரம் எப்போதும் காலியாக வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. ஆனால் மெமு ரயிலுக்கு இத்தகைய இன்ஜின் மாற்றம் செய்யும் அவசியம் இல்லை.

திருவனந்தபுரம் கோட்டத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடியும் முன்பே மெமு ரயில்கள் அறிவிக்கப்பட்டு, பணிகள் முடிந்ததும் இயக்கப்பட்டன. நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - செங்கோட்டை மின்மயமாக்கல் பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் மதுரை கோட்டமும் மெமு ரயில்களை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மதுரை கோட்டத்தில் நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - செங்கோட்டை, விருதுநகர் - செங்கோட்டை, திண்டுக்கல் - பொள்ளாச்சி, செங்கோட்டை - கொல்லம் போன்ற வழித்தடங்கள் மின்மயமாக்கல் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

இப்பணிகள் முடிவு பெற்றவுடன் இத்தடங்களில் தற்போது இயங்கும் சாதாரண ரயில் பெட்டிகளை மாற்றி விட்டு மின்சார ரயில்கள் இயங்கும். இவ்வாறு இயக்கப்படும் ரயில்கள் மெமு ரயில்களாக இயக்கப்பட வேண்டும் என்றால், தென்மாவட்டங்களில் மெமு பராமரிப்பு பணிமனை அவசிய தேவையாக உள்ளது. மெமு ரயிலை பராமரிக்க தற்போது தெற்கு ரயில்வேயில் கொல்லம், பாலக்காடு, ஆவடி ஆகிய இடங்களில் மட்டுமே பணிமனை அமைந்துள்ளது. சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் மெமு ரயில்கள் அருகில் உள்ள பாலக்காட்டில் உள்ள மெமு பணிமனையில் பராமரிக்கப்படுகிறது. எனவே நெல்லையில் மெமு ரயில் பராமரிப்பு பணிமனை அமைக்கப்பட்டால், மெமு ரயில்களை எளிதாக பராமரிக்க முடியும்.இதுகுறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ராம் கூறுகையில், ‘‘நெல்லைக்கு அருகே மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் மெமு ரயில் பராமரிப்பு பணிமனை அமைக்க தேவையான நிலங்கள் ரயில்வே வசம் உள்ளது. அதுமட்டுமின்றி, கிராசிங் ஸ்டேஷனுக்காக கட்டப்பட்ட கட்டிட வசதிகளும் மேலப்பாளையத்தில் போதிய அளவு உள்ளது. எனவே மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் மெமு பராமரிப்பு பணிமனையை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் நெல்லையை மையமாக வைத்து மெமு ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படும்.

அதாவது நெல்லை - கொல்லம், நெல்லை - மதுரை மட்டுமல்லாமல் திருச்செந்தூர் - நெல்லை - செங்கோட்டை, செங்கோட்டை - நெல்லை - கன்னியாகுமரி, திருவனந்தபுரம் - நெல்லை போன்ற இடங்களுக்கு நேரடியாக மெமு ரயில்கள் இயக்க முடியும். ஏனென்றால் எந்த ஒரு இடத்திலும் ரயில் இன்ஜின் கழற்றி மறுமுனையில் மாட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதுகுறித்து நெல்லை எம்பி ஞானதிரவியமும் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். எனவே நெல்லையை மையமாகக் கொண்டு மெமு ரயில்கள் பராமரிப்பு பணிமனை அமைக்கப்படுவது அவசிய தேவையாகும்.’’ என்றார்.

Related Stories: