கேரள அரசின் விஷூ பம்பர் லாட்டரி கன்னியாகுமரி அரசு டாக்டர் உறவினருக்கு 10 கோடி பரிசு

குளச்சல்: கேரளா அரசின் விஷூ பம்பர் லாட்டரியில் குமரியை சேர்ந்த அரசு டாக்டர், உறவினருக்கு ₹10 கோடி பரிசு விழுந்துள்ளது. தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கேரள அரசால் நடத்தப்படும் லாட்டரி சீட்டுகளை கேரளாவையொட்டிய குமரி மாவட்டத்தினர் வாங்கி வருவது வழக்கம். குமரி - கேரள எல்லையான களியக்காவிளையிலும் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகிறது. இந்நிலையில் கேரளாவில் இந்த ஆண்டு விஷூ பம்பர் லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ₹10 கோடி விழுந்தது. இந்த டிக்கெட் ஒன்றின் விலை ₹ 250. மே 22ம் தேதி நடைபெற்ற குலுக்கலில் திருவனந்தபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட HB 727990 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரம் பழவங்காடி பகுதியில் உள்ள லாட்டரி கடை இந்த டிக்கெட்டை விற்றிருந்தது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக முதல் பரிசு பெற்றவர் யார் என்பதை கண்டறிய முடியாத நிலை இருந்து வந்தது.

இந்தநிலையில் அந்த லாட்டரி சீட்டிற்கு சொந்தகாரர்களாக குமரி மாவட்டம் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றும் டாக்டர் எம்.பிரதீப் குமார், உறவினர் என்.ரமேஷ் என்பதும், இவர்கள் மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. உறவினரை வெளிநாடு அனுப்பி வைக்க கடந்த 15ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற நிலையில் இவர்கள் இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார்கள். வீட்டின் அருகே நடந்த மரணம் மற்றும் திருவிழா காரணமாக பரிசுத்தொகையை பெறுவதற்கு அவர்கள் செல்ல தாமதமானது.

நேற்று டிக்கெடுடன் இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குநரகம் சென்றுள்ளனர். பரிசுத்தொகை ₹10 கோடியில் வரித்தொகை கழித்து ₹6 கோடியே 16 லட்சம் இவர்களுக்கு கிடைக்கும். டாக்டர் பிரதீப்குமார் கூறுகையில், ‘‘வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. சிறிய அளவில் பரிசுகள் விழுவதும் உண்டு. ஆனால் இதுபோன்று பெரிய அளவில் பரிசுத்தொகை விழுந்தது இல்லை. சிறிது கடன்கள் உள்ளன. அவற்றை அடைக்க வேண்டும். கடவுளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்’’ என்றார்.

Related Stories: