திருமுல்லைவாயலில் குடிபோதையில் தகராறு: பெரியப்பாவை கழுத்து நெரித்து கொலை செய்த வாலிபர் கைது

ஆவடி: திருமுல்லைவாயலில் நேற்றிரவு குடிபோதையில் கூலித்தொழிலாளியின் கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை இன்று காலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல், வெங்கடேஸ்வரா நகர், 3வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (50). கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவி மற்றும் குடும்பத்தை பிரிந்து, இங்கு தாய்வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது தம்பி மகன் விக்னேஷ் (24). கூலி தொழிலாளி. தனது தந்தை இறந்ததும், பாட்டி வீட்டில் விக்னேஷும் தஞ்சமடைந்து, கூலிவேலை செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், பெரியப்பா செல்வராஜ், விக்னேஷ் ஆகிய இருவரும் நேற்றிரவு வீட்டுக்குள் மது அருந்தினர். பின்னர் குடிபோதையில் இருவருக்கும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமான விக்னேஷ், பெரியப்பா செல்வராஜின் கழுத்தை நெரித்து, இருபக்கமும் திருகி கொலை செய்திருக்கிறார். இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் வீரராகவன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். செல்வராஜின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த விக்னேஷை இன்று காலை கைது செய்தனர். அவனிடம் பாட்டி வீட்டை பாகம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: