மரம் அறுக்கும் மின்சார ரம்பத்தால் மனைவி, இரு குழந்தைகள் கழுத்தை அறுத்து கொடூர கொலை: அதே பாணியில் ரம்பத்தால் கழுத்தை அறுத்து ஐடி ஊழியர் தற்கொலை

சென்னை: மருந்து கடை நடத்தி வந்த மனைவி மற்றும் பள்ளிகளில் படித்து வந்த இரு பிள்ளைகள் தூங்கும்போது அவர்களின் கழுத்தை மரத்தை அறுக்கும் மின்சார ரம்பத்தால் கொடூரமாக அறுத்து கொலை செய்துள்ளார் ஐடி ஊழியர். பின்னர், தானும் அதே மின்சார ரம்பத்தால் தன் குரல்வளை, கழுத்து அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், வெங்கடேஸ்வரா நகர், இஷ்டசித்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (41). சோழிங்கநல்லூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மாத சம்பளம் ரூ.70 ஆயிரம். இவரது மனைவி காயத்ரி (39). மகள் நித்யாஸ்ரீ (13), மகன் ஹரிகிருஷ்ணன் (8). இதில் காயத்ரி கணவர் சம்மதத்துடன் அதே பகுதியில் ‘நித்யஸ்ரீ’ என்ற பெயரில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். அதில் கணிசமாக வருவாய் கிடைத்து வந்துள்ளது. பிள்ளைகள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 9 மற்றும் 2ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில், மனைவியின் நாட்டு மருந்து கடையை விரிவாக்கம் செய்ய பிரகாஷ் தெரிந்தவர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கினாராம். ஒரு கட்டத்தில் பிரகாஷுக்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. வட்டி கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரவில் தூக்கம் இல்லாமலும், மனஉளைச்சலிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தன் நிறுவன பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடன் பிரச்னைக்கு தற்கொலை ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு பிரகாஷ் தள்ளப்பட்டுள்ளார். தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால், தனது மனைவி மற்றும் பிள்ளைகள் வாழ்வு சூனியமாகும். அவர்களை யார் பராமரிப்பார்கள் என்று நினைத்தார். தன் சாவுக்கு பிறகும் தன் குடும்பத்தினர் யாரும் துன்பப்படக் கூடாது என்று கருதினார். அதனால் அவர்களையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதற்காக முன்கூட்டியே, கடந்த 19-ம் தேதி மரம் அறுக்கும் மின்சார இயந்திரத்தை ஆன்லைனில் வாங்கி வீட்டில் ரகசியமாக வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (27ம் தேதி) அவர்களின் திருமண நாள் என்று கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினம் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள பிரகாஷ் முடிவு செய்துள்ளார்.

இது குழந்தைகளுக்கு தெரியாது. அன்றைய தினம் இரவு அனைவரும் கோயிலுக்கு சென்றுவிட்டு சாமி கும்பிட்டு நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். பின்னர் அனைவரும் ஒன்றாக உணவு சாப்பிடச் சென்ற போது, அவர்களுக்கு தெரியாமல் உணவில் மயக்க மருந்தை பிரகாஷ் கலந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனை சாப்பிட்ட அனைவரும் தூங்கத் தொடங்கினர். இதன் பின்னர் மனதை கல்லாக்கிக் கொண்டு, மனைவி, மகள், மகன் என்று ஒவ்வொருவரின் கழுத்தையும், தான் தயாராக வாங்கி வைத்திருந்த மரம் அறுக்கும் மின்சார ரம்பம் கொண்டு, கொடூரமாக அறுத்து கொலை செய்தார்.

அனைவரும் இறந்து விட்டதை உறுதி செய்த பின்னர், தனது கழுத்தையும் அதே இயந்திரம் கொண்டு அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே காயத்ரியின் தந்தை சென்னை, ரெட்டேரியில் இருந்து நேற்று காலை ஏதேச்சையாக பிரகாஷ் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது, வீட்டின் கதவு பூட்டாமல் வெறுமனே மூடப்பட்டு இருந்தது.

கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து சங்கர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். சினிமாவை மிஞ்சும் அளவுக்கும் அதைவிட கொடூரமாகவும் நடந்த இந்த கொலை சம்பவம் சென்னை மக்களை உலுக்கி எடுத்துள்ளது. இந்த காட்சிகளை பார்த்தவர்களில் பலர் மிரண்டு போய் உள்ளனர்.

அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மனைவி மற்றும் குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் அறுத்துக் கொன்றுவிட்டு, பிரகாஷ் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்துள்ளார். அதன் பின்னும் ரம்பம் இயங்கிக் கொண்டிருந்துள்ளது. போலீசார் விசாரணைக்கு வீட்டுக்கு வந்த போதே அதை நிறுத்தியுள்ளனர்.

பிரகாஷ்  இறப்பதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி, அதனை சுவரில் ஒட்டி வைத்திருந்தது தெரிய வந்தது. அதில், ‘எங்களின் இந்த முடிவிற்கு நாங்களே முழு காரணம். இது நானும், எனது மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவு’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. அதனை தடயவியல் துறையினர் கைப்பற்றி, இது நிஜமாகவே பிரகாஷின் கையெழுத்து தானா என்று ஆராய்ந்து வருகின்றனர். மேலும், தனது உறவினர் பெண் ஒருவருக்கு, தனது நிறுவனம் தனக்கு கொடுத்திருந்த இரண்டு லேப்டாப் களையும் ஒப்படைத்து விடுமாறு, அதனுடைய பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களையும் அனுப்பிவைத்திருந்தார்.

தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமா?..கமிஷனர் பேட்டி

4 பேர் இறந்து கிடந்த வீட்டை நேற்று தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் ரவி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  தற்கொலை செய்து கொண்ட விதத்தை பார்க்கும்போது, நேற்று முன்தினம் இரவு சுமார் 11.30 மணியளவில் இந்த தற்கொலை சம்பவம் நடந்திருப்பதாக தெரிய வருகிறது. இறுதி முடிவு பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியும். வீட்டில் உள்ள பொருட்கள் எதுவும் கலைந்து போகாமல், வைத்தது வைத்த நிலையிலேயே உள்ளது.

இதனைப்பார்க்கும்போது, இரவு தூங்கச் செல்வதற்கு முன், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு, பிரகாஷ் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர்கள் மயங்கிய பிறகு, மரம் அறுக்கும் நவீன இயந்திரம் கொண்டு பிரகாஷ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் கழுத்தை அறுத்து இருக்க வாய்ப்பு உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் முழு விபரம் தெரிய வரும். அவரது வீட்டை சோதனை செய்து பார்த்த போது, ரூ.3.50 லட்சம் கடன் வாங்கியதற்கான பத்திரம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனால் உண்மையாகவே இவர்கள் கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசாரின் முழு விசாரணைக்குப்பிறகே உண்மையான காரணம் என்ன என்று தெரிய வரும் என்றார். இதனிடையே பிரகாஷ் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரையும் கொலை செய்வதற்கு முன், வோட்கா என்னும் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

அதன் பாட்டில்களை தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் தெரியவந்தது. கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் பிள்ளைகளை ஐடி ஊழியர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: