சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை; திகார் சிறையின் மூத்த கைதியான மாஜி முதல்வர்..! ஏற்கனவே இருந்த சிறை எண்: 2ல் அடைப்பு

புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, டெல்லி திகார் சிறையின் அதே சிறை எண்: 2ல் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளார். அரியானா முன்னாள் முதலமைச்சரும், இந்திய தேசிய லோக்தளம் (இன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (87), கடந்த 1993 முதல் 2006ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐயால் வழக்குபதியப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ நீதிமன்றம், அவரை குற்றவாளி என்று அறிவித்தது. அதன் தண்டனை விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதையடுத்து அவரை நேற்றிரவு திகார் சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டார். அதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். நேற்றிரவு 7 மணிக்கு சிறை எண்: 2ல் அடைக்கப்பட்டார். அங்கு அவருடன் மேலும் இரண்டு கைதிகள் உள்ளனர். இதற்கு முன்பும், ஆசிரியர் ஆட்சேர்ப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அப்போது இதே சிறை எண்-2ல் அடைக்கப்பட்டார்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி சவுதாலா வெளியே வந்தார். தற்போது சொத்து குவிப்பு வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 87 வயதாகிறது. 80 வயதுக்கு மேற்பட்ட ஏழு கைதிகளில் ஒருவராக உள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19,584 கைதிகளில் மூத்தவர். மேலும் 70 முதல் 80 வயதுக்குட்பட்ட கைதிகள் 63 பேர் சிறையில் உள்ளனர்’ என்றன.

Related Stories: