கோயம்பேட்டில் தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் தகராறு வாலிபருக்கு தலையில் கத்தி வெட்டு; நண்பர் கைது

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கோயம்பேடு பஸ் நிலைய பணிமனையில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி காண்ட்ராக்டர் மூலம் நடந்து வருகிறது. இங்கு, கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (23), சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோத் குமார் (23) ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கின்றனர். நண்பர்களான இவர்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கியுள்ளனர்.

நேற்றிரவு வழக்கம் போல வேலை முடிந்து தூங்குவதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு, இடம் பிடிப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டினார். தலையில் வெட்டுப்பட்ட அவர் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது தலையில் 12 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை தேடினர். இன்ஸ்பெக்டர் குணசேகரன், எஸ்ஐ பூபதி தலைமையில் கொண்ட போலீசார், அதே பகுதியில் பதுங்கியிருந்த வினோத்குமாரை கைது செய்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: