மூத்த தலைவர்களில் ஒருவர்; முன்னாள் ஒன்றிய அமைச்சர் காங்கிரசில் இருந்து கபில் சிபல் விலகல்: சமாஜ்வாடி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் போட்டி

லக்னோ: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான கபில் சிபல், காங்கிரசில் இருந்து நேற்று அதிரடியாக விலகினார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோற்றதில் இருந்தே காங்கிரசில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. 2019 மக்களவை தேர்தலில் தோற்றப் பிறகும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியை சந்தித்தப் பிறகும் உட்கட்சி பூசல், தலைவர்கள் விலகல் போன்றவை அதிகமாகி இருக்கின்றன. குறிப்பாக, நேரு குடும்பத்தை சாராத ஒருவரை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கும்படி, குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உட்பட 23 தலைவர்கள் அடங்கிய காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குழு வலியுறுத்தி வருகிறது. இவர்கள் ‘ஜி 23’ குழு தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

சமீபத்தில், உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டபேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் வரிசையாக விலகி வருகின்றனர். ராஜஸ்தானில் கடந்த வாரம் நடந்த சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சியை பலப்படுத்தவும், கீழ் மட்டத்தில் இருந்து மேல் வட்டம் வரையில் அமைப்பு தேர்தல் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரசில் இருந்து கபில் சிபல் நேற்று திடீரென விலகினார். சமீபத்தில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் அவர் சந்தித்து பேசினார். இந்நிலையில், அக்கட்சியின் ஆதரவுடன் உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அப்போது, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.

உபி.யில் பாஜ ஆட்சி நடந்த போதிலும், சமாஜ்வாடிக்கு 111 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவோடு மாநிலங்களவை தேர்தலில்  கபில் சிபல் வெற்றி உறுதி ஆகி உள்ளது. மனுதாக்கலுக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய கபில் சிபல், ‘‘காங்கிரசில் இருந்து கடந்த 16ம் தேதியே விலகி விட்டேன். நான் எப்போதும் நாட்டில் சுதந்திரமாக குரல் கொடுக்க விரும்புகிறேன்.  மோடி அரசை எதிர்க்கும் வகையில் கூட்டணி அமைக்க விரும்புகிறோம்,’’ என்றார்.

இமாச்சலத்துக்கு புதிய நிர்வாகிகள்

இமாச்சல பிரதேச சட்டபேரவைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இதனால், அம்மாநில காங்கிரசுக்கு 3 மூத்த துணை தலைவர்கள், 6 துணை தலைவர்கள் உள்ளிட்ட  நிர்வாகிகள்  நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் மாநில தலைவர் பிரதிபா சிங்குக்கு கீழ் பணிபுரிவார்கள் என்று மேலிடம் தெரிவித்துள்ளது.

5 மாதங்கள்; 5 தலைகள்

காங்கிரசில் இருந்து கடந்த ஒரே மாதத்தில் 5 முக்கியமான தலைவர்கள் விலகி உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:

* குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ஹர்திக் படேல் ராஜினாமா செய்தார். அவர் பாஜ.வில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

* பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் சுனில் ஜாக்கர். 2012-2017 வரையில் இம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக சுனில் ஜாக்கர் கடந்த வாரம் காங்கிரசில் இருந்து விலகினார்.

* காங்கிரஸ் மூத்த தலைவரும், ஒன்றிய சட்டத்துறை முன்னாள் அமைச்சருமான அஸ்வினி குமார் சமீபத்தில் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

* உபி.யை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆர்.பி.என்.சிங், உபி சட்டபேரவை தேர்தலுக்கு முன் பாஜ.வில் சேர்ந்தார்.

* ஏற்கனவே 4 பெரிய தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகிய நிலையில், தற்போது மூத்த தலைவரான கபில் சிபலும் விலகியிருக்கிறார்.

Related Stories: