மாலத்தீவு கடற்கரையோரம் புதிதாக வாங்கிய 132 கோடி சொகுசு பங்களாவில் மகிந்த தஞ்சம்?

கொழும்பு: மாலத்தீவு கடற்கரையோரம் புதிதாக வாங்கியதாக கூறப்படும் ₹132 கோடி சொகுசு பங்களாவில் மகிந்த குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் நடந்த போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக, கடந்த 9ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜினாமா செய்தார். பின்னர், உயிருக்கு பயந்து குடும்பத்துடன் திருகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்தார். பிறகு, ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த அவர் தற்போது, மாலத்தீவில் பதுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகியதும், மாலத்தீவு முன்னாள் அதிபரும், தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத்துடன் தொலைபேசியில் பேசி, மாலத்தீவில் தஞ்சமடைய உதவி கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த நஷீத், சமீபத்தில் இலங்கை சென்று மகிந்தாவை சந்தித்து பேசி உள்ளார்.

பின்னர், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரின் கடற்கரையோர ரிசார்ட்டில் ₹132 கோடி மதிப்பிலான ஒரு பிரமாண்ட சொகுசு பங்களாவை மகிந்த வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இங்குதான் மகிந்த பதுங்கி உள்ளதாக இலங்கை செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இந்த செய்தியை மகிந்த ராஜபக்சேயின் மகனும், எம்பியுமான நமல் ராஜபக்சே மறுத்துள்ளார். மகிந்த மாலத்தீவில் பதுங்கிய செய்தி பொய் என்றும் அவர் கூறி உள்ளார். ஆனாலும், இலங்கையில்தான் உள்ளதாக கூறும் மகிந்த மற்றும் குடும்பத்தினர் இதுவரை யாரும் வெளியில் தலைகாட்டவில்லை. இதனால், அவர்கள் மாலத்தீவில்தான் பதுங்கி இருக்கக்கூடும் என்று சந்தேகம் வலுக்கிறது.  

கடன் வழங்க உலக வங்கி மறுப்பு

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையில் பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை மறுசீரமைக்கும் வரை, புதிய கடன் உதவிகளை வழங்க இயலாது’ என்று கூறி உள்ளது. இது இலங்கைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே,  பிரதமர் ரணில் கூடுதல் பொறுப்பாக, நிதித்துறை அமைச்சராக அதிபர் கோத்தபய முன்னிலையில் நேற்று பதவியேற்று கொண்டார். அடுத்த 6 வாரத்திற்குள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

Related Stories: