வெள்ளிங்கிரி மலை ஏறிய உயர்நீதிமன்ற வக்கீல் பலி

தொண்டாமுத்தூர்: வெள்ளிங்கிரி மலையேறி சாமி தரிசனம் செய்த உயர்நீதிமன்ற வக்கீல் மலையை விட்டு இறங்கி வந்தபோது உயிரிழந்தார்.சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன் (55). சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், இளவரசன் என்ற மகனும், இளவரசி என்ற மகளும் உள்ளனர். இளஞ்செழியன் தனது நண்பர் ராமமூர்த்தியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன் கோவைக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர் ராமமூர்த்தியுடன் பூண்டிக்கு வந்தார்.

 வெள்ளிங்கிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டார். இதையடுத்து நண்பருடன் மலையேறத் துவங்கினார்.  இருவரும் ஏழுமலை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலை கிரிமலையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர். ஆறாவது மலை தாண்டி வரும்போது தனக்கு உடல்நிலை முடியவில்லை என்று நண்பர் ராமமூர்த்தியிடம் இளஞ்செழியன் கூறியுள்ளார். பின்னர் 5வது மலைக்கு வந்த நிலையில் மயங்கி சரிந்தார். ஏற்கனவே அவர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மலையேறுவதற்காக வந்த மருத்துவர் ஒருவர் அவரை பரிசோதித்துவிட்டு இளஞ்செழியன் இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கிடைக்கவே, வனத்துறையினர் சம்பவ இடம் சென்று  இறந்தவரின் உடலை மலை மேலிருந்து  கீழே கொண்டு வந்தனர். வக்கீல் இறப்பு குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: