குடும்பத்திற்காக உழைக்கிறோம்... அவமானப்படத் தேவையில்லை!

நன்றி குங்குமம் தோழி

அக்கா கடை

‘‘என் குடும்பம்தான் எல்லாம். அவர்கள் தான் என் உலகம். அவர்களுக்காக நான் பெரிய தியாகம் எல்லாம் செய்யவில்லை. எங்க வீட்டு வாசலில் ஒரு சிறிய அளவில் பிரியாணி கடையை ஆரம்பித்தேன்’’ என்கிறார் சென்னை, தரமணியை சேர்ந்த அனிதா. இவர் தன் கணவருடன் இணைந்து இந்த பிரியாணி கடையினை இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திறந்துள்ளனர். ஆரம்பத்தில் இரண்டு கிலோ மட்டுமே பிரியாணி தயாரித்து வந்த இந்த தம்பதியினர் தற்போது எட்டுக் கிலோ அளவிற்கு சமைத்து வருகிறார்கள்.

“2020ம் ஆண்டு மற்றவர்களுக்கு எப்படி இருந்ததுன்னு தெரியல. ஆனா எனக்கு ரொம்பவே மோசமான வருடம்ன்னு தான் நான் சொல்லணும்’’ என்று பேசத் துவங்கினார் அனிதா.‘‘என் கணவர் சுரேஷ் டிராவல்ஸ் வச்சு நடத்திக் கொண்டு இருந்தார். கடந்த 23 வருடமாக அவருக்கு இதுதான் தொழில். அதன் மூலம் வரும் வருமானம் தான் எங்களின் வாழ்வாதாரம்.

ஆனால் அதுவே வண்டி கடன் அடைக்கவும் மற்றும் என் குடும்பத்தை நகர்த்தவும் போதுமானதாக இருந்தது. கடன் ஏதும் இல்லாமல் எங்களின் வாழ்க்கை என்ற ஓடை மிகவும் நிதானமாகத்தான் பயணித்துக் கொண்டு இருந்தது. ஆனால் இந்த கொரோனா வந்து எங்களின் வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டுவிட்டது’’ என்றவரை தொடர்ந்தார் சுரேஷ்.

‘‘ஆரம்பத்தில் சொந்தமா கார் வச்சு டிராவல்ஸ் நடத்திக் கொண்டு இருந்தேன். கடந்த நாலு வருஷமா காரை வித்துட்டு டெம்போ டிராவல் வண்டியை ஐ.டி நிறுவனங்களுக்காக ஓட்டிக் கொண்டு இருக்கேன். காரணம் ஓலா, ஊபர்ன்னு கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்த பிறகு என்னால் தொடர்ந்து டிராவல்ஸ் நடத்த முடியவில்லை. மேலும் என்னுடையது டெம்போ டிராவல்ஸ் வண்டி என்பதால், அதில் 12 பேர் பயணிக்கலாம்.

அதற்கு ஐ.டி போன்ற நிறுவனங்களில் டிரிப் அடிச்சா தான் சரியா இருக்கும். மேலும் நிறுவனத்திற்கு ஓட்டும் போது, மாத வருமானம் என்று கணிசமாக வரும். அந்த தொகை என் குடும்பத்தை நகர்த்த சரியாக இருந்தது. என் இரண்டு பசங்களையும் சி.பி.எஸ்.இ பள்ளியில் தான் படிக்க வச்சேன். இப்ப குடும்ப சூழல் காரணமாக மெட்ரிக் பள்ளியில் சேர்த்துவிட்டேன்’’ என்று மௌனமானார்.

‘‘எங்க வாழ்க்கை மட்டுமில்லை... எங்க பசங்களின் படிப்பும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டது’’ என்று தன் கணவரை தொடர்ந்தார் அனிதா. எங்க இருவரின் முக்கிய நோக்கமே, இரண்டு பசங்களையும் நல்லா படிக்க வைக்கணும் என்பது தான். எல்லா பெற்றோர்கள் போல் அவங்க நல்லா படிச்சு கரை ஏத்தணும் என்பது தான் எங்களின் குறிக்கோளா இருந்தது. ஆனால் இந்த வருடம் என்னால் அவர்களுக்கு பள்ளிக் கட்டணம் கூட கட்ட முடியல. மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால், என் கணவருக்கு வேலை இல்லை.

வருமானமும் இல்லை. இவங்க பள்ளியிலோ கட்டணம் கட்ட சொன்னாங்க. அவ்வளவு பெரிய தொகைக்கு நாங்க எங்க போவது. கடன் வாங்கினாலும் அதை திருப்பி கொடுக்கணும். மேலும் இந்த சூழல் எப்படி இருக்கும்ன்னு தெரியல. திரும்ப இவருக்கு வேலை இருக்குமான்னு குழப்பம் வேற. அதனால பசங்களை பள்ளியில் இருந்து டி.சி வாங்கிட்டு அரசுப் பள்ளியில் சேர்க்கலாம்ன்னு முடிவு செய்தோம்’’ என்றவரின் பசங்க படிப்பிற்காக ஒரு வழிகாட்டியாக வந்தார் இவர் கணவரின் வாடிக்கையாளர் ஒருவர்.

‘‘அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கார். ஒவ்வொரு வருடமும் மேல்மருவத்தூர் கோயிலுக்கு குடும்பத்துடன் வருவார். அப்ப என் வண்டியில் தான் பயணம் செய்வார். இந்த வருடம் அவரால் வர முடியாத சூழ் நிலை என்பதால், என்னை அழைத்து என் நிலைமையை பற்றி விசாரித்தார். என்ன நினைச்சாரோ தெரியல ஒரு லட்ச ரூபாய் என்னுடைய அக்கவுண்டில் டெபாசிட் செய்தார்.

அவரிடம் இது குறித்து கேட்ட போது, ‘எப்படியும் இந்த வருடம் நான் சென்னைக்கு வந்திருந்தால் ஃபிளைட் டிக்கெட்டுக்கே ஒரு லட்சம் செலவாகி இருக்கும். அந்த பணம் உன் பசங்க படிப்புக்கு உதவட்டும்ன்னு சொன்னார். சி.பி,எஸ்.இயில் சேர்க்க முடியாது என்றாலும், மெட்ரிக் பள்ளியில் சேர்க்கலாம்ன்னு, அவர் கொடுத்த தொகையைக் கொண்டு என் பசங்கள மெட்ரிக் பள்ளியில் சேர்த்துவிட்டேன். பசங்களின் இந்த வருட படிப்பு பிரச்னை தீர்ந்தது.

அடுத்து சாப்பாடு பிரச்னை. ஏற்கனவே வண்டி ஓட்டி சேர்த்து வைத்த காசு மற்றும் என் மாமியார் கொடுத்த காச வச்சு இரண்டு மாசம் சமாளிச்சோம். அதன் பிறகு யாரிடம் போய் கேட்பது. என் மாமியார் வீட்டிலும் பெரிய வசதி கிடையாது. அவங்க சேமிப்பில் தான் எங்களுக்கு கொஞ்சம் கொடுத்தாங்க. அவங்களையும் தொந்தரவு செய்ய முடியாது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. அந்த சமயத்தில் எங்க குடும்பத்தின் பசியை போக்கியது அம்மா உணவகம் தான். மூணு வேளை இலவசமா சாப்பாடு கொடுத்தாங்க. நாங்க ஐந்து பேரும், என் அம்மா உட்பட அங்கு தான் சாப்பிட்டோம். அப்பதான் அந்த உணவகத்தின் மதிப்பு எனக்கு புரிஞ்சது’’ என்ற சுரேஷுக்கு மறுபடியும் ஒரு கை உதவ முன் வந்தது.

‘‘என் கணவரின் நண்பர் அமெரிக்காவில் இருக்கார். அவர் இந்தியா வரும் போது, எங்க வீட்டுக்கு வராம இருக்க மாட்டார். ரொம்ப உரிமையா நான் சமைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு புகழ்ந்துவிட்டு செல்வார். ஒரு முறை அவர் என் கணவருக்கு போன் போட்டு பேசினார். ஆனால் இவரோ எங்களின் நிலையை எடுத்து சொல்ல மனமில்லாமல், எல்லாரும் நலமாக இருப்பதாக சொல்லிட்டார். ஆனால் அவர் மற்றொரு நண்பர் மூலம் எங்களின் நிலையை ெதரிந்துகொண்டு எங்களுக்கு உதவ முன் வந்தார். அப்ப அவர் தான் ஒரு யோசனை சொன்னார். இப்படி தினமும் சாப்பாட்டுக்காக கஷ்டப்படுவதற்கு பதில் நீயே ஏன் சின்ன அளவில் உணவகம் வைக்கக் கூடாதுன்னு என் கணவரிடம் கேட்டு இருக்கார்.

ஒரு உணவகம் அமைக்க பாத்திரம், மளிகை பொருட்கள் எல்லாம் நான் வாங்கி தரேன். கண்டிப்பா நல்லா போகும்ன்னு சொன்னார். என் கணவருக்கும் அது நல்ல ஐடியாவா பட்டது. ஆனால் அவருக்கு என்னிடம் அது குறித்து  கேட்க கொஞ்சம் தயக்கம். காரணம் சாலையில் நின்று தான் சமைக்கணும். அந்த வழியே செல்பவர்கள் பார்த்து செல்வார்கள். கேலியும் செய்வாங்க. தயங்கி தான் என்னிடம் விஷயத்தை சொன்னார். உடனே நான், நம் குடும்பத்திற்காக உழைக்கிறோம்... நாம கஷ்டப்பட்ட போது அந்த நாலு பேர் எங்க போனாங்க. இப்ப அவங்க பார்க்கிறாங்கன்னா நாம வாழ்க்கையை எப்படி நகர்த்திறது. நாம திருடல... பொய் சொல்லல... கஷ்டப்பட்டு உழைக்கிறோம்ன்னு சொன்னேன்’’ என்றவரை தொடர்ந்தார் சுரேஷ்.

‘‘இவங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் எனக்குள் ஒரு தைரியத்தை கொடுத்தது. என்னால் முடியாதுன்னு அவங்க மட்டும் சொல்லி இருந்தா, நான் நொடிஞ்சே போயிருப்பேன். மேலும் எனக்கு சுடு தண்ணீர் கூட வைக்க ெதரியாது. எல்லாமே என் மனைவி தான் பார்த்துக்கிட்டாங்க. எனக்கு வேளா வேளை சாப்பாடு, என் துணியை துவைப்பது, பசங்க, அம்மாவை பார்த்துக் கொள்வது எல்லாமே அவங்க தான். நான் வண்டி ஓட்டுவேன். சம்பாரிச்சு தருவேன். அவ்வளவு தான்.

இனி என் மனைவிக்கு பக்கபலமா இருப்பேன் என் உயிர் உள்ள வரை. அவங்க தான் என் பலமே...என் நண்பர் உதவ தயார்ன்னு சொல்லிட்டார். உணவகம் ஆரம்பிக்க முடிவு செய்தாயிற்று. என்ன சாப்பாடு கொடுக்கலாம்ன்னு திட்டமிட்டோம். சொந்த வீடு என்றாலும், எங்க வீடு சின்னது தான். மேலும் வீட்டு வாசலில் தான் வைத்து சமைக்கணும். அதனால் சாதம், குழம்பு, காய் எல்லாம் செய்ய வசதிப்படாது. சிம்பிளாகவும் இருக்கணும், அதே சமயம் மக்கள் விரும்பி சாப்பிடணும்... யோசித்த போது பிரியாணி தான் நினைவுக்கு வந்தது.

என் நண்பரும் ஆமோதிக்க, ஆகஸ்ட் மாதம் இரண்டு கிலோ பிரியாணியோடு ஆரம்பித்தோம். அதற்கு முட்டை, பச்சடி மற்றும் கத்தரிக்காய் சமைச்சு கடையும் போட்டாச்சு. முதல் நாள் 15 பேர் சாப்பிட்டாங்க. அவங்க அனைவரும் சொன்ன ஒரே விஷயம். சாப்பாடு நல்லா இருக்கு. இதே சுவை மற்றும் தரத்தை மெயின்டெயின் செய்யுங்க. கடைசியா ஒரு பிரியாணி தான் இருந்தது. அதை சாப்பிட 16வதா வந்த நபர் இன்றும் எங்க கடைக்கு மதிய உணவுக்காக வறார். அன்னிக்கு இரண்டு கிலோ போட்டேன். இப்ப கடவுள் புண்ணியத்தில் எட்டு கிலோ பிரியாணி போடுறேன்.

வீட்டு வாசல்ல வச்சுதான் செய்றோம். சொந்த வீடு என்பதால் சமாளிக்க முடியுது. ஆரம்பிக்கும் போது சில பிரச்னைகள் வந்தது. புட் இன்ஸ்பெக்டர் வந்து ஆய்வு செய்தார். ரோட்டுல வச்சு இருக்கீங்க. உரிமம் வாங்கணும்ன்னு சொன்னார். அவரிடம் என் நிலையை எடுத்து சொன்னேன். இது தான் என் வருமானம். இதுவும் இல்லைன்னா என் குடும்பமே கஷ்டப்படும் என்றேன்.

புரிந்து கொண்டார். அவர் சொன்ன வழிகாட்டல் படி உரிமம் எடுத்தேன். அதன் பிறகு வீட்டு வாசல் என்பதால் கொஞ்சம் மண்ணாக இருந்தது. அதை சிமென்ட் தரையாக மாற்றி மேலே ஒரு தார்ப்பாய் போட்டேன். இப்ப மழை வந்தாலும் எங்களால் அங்க சமைக்க முடியும். மேலும் ஒரு ஐந்து பேர் உட்கார்ந்து சாப்பிடவும் முடியும்.

நான் விளம்பரம் எல்லாம் கொடுக்கல, வசதியும் இல்லை. முதலில் சாப்பிட்ட பதினைந்து பேர் மூலம் தான் கஸ்டமர்கள் வர ஆரம்பிச்சாங்க. இப்ப சின்னச் சின்ன பர்த்டே பார்ட்டிக்கு 20 முதல் 30 பேருக்கு சமைச்சு தரோம். 125 பேருக்கு சாப்பாடு வேணும்ன்னு கடந்த மாசம் சொன்னாங்க. அதுவும் செய்து கொடுத்தோம். ஆரம்பத்தில் பிரியாணி, முட்ைட, பச்சடி, கத்தரிக்காய் தான் கொடுத்து வந்தோம். இப்ப சிக்கன் 65, போட்டி, கல்லீரல், சிக்கன் கிரேவி எல்லாமே தறோம். மதியம் ஒரு வேளை என்பதால், தினமும் 12 மணி முதல் 4 மணி வரை கடை இருக்கும்’’ என்றார் சுரேஷ்.

‘‘சமையல் பற்றி எதுவுமே இவருக்கு தெரியாது. இப்ப இவர் தான் எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்கிறார்’’ என்று கணவருக்கு பாராட்டு அளித்த அனிதா அவருக்கும் மறுபடியும் வேலை வந்தால் அதற்கு தடை சொல்ல மாட்டாராம். ‘‘வண்டி ஓட்டுவது அவருக்கு எல்லாமே. வாழ்வாதாரம் இல்லை என்பதால் தான் கடையை ஆரம்பிச்சோம். அதற்காக அவருக்கு திரும்ப வேலை வந்தா நான் தடை சொல்ல மாட்டேன். இந்த கடையை நான் பார்த்துப்பேன். இந்த நாலு மாசம் ஒரு தொழில் நடத்த பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். வீட்டில் இரண்டு பேர் வருமானம் பார்த்தால் நல்லது தானே.

இப்பதான் ஆரம்பிச்சு இருக்கோம். அடுத்த கட்டம் செல்ல வேண்டும். அதற்கு நாங்க வேறு இடத்திற்கு வாடகைக்கு சென்றுவிட்டு இந்த இடத்தை ஒரு சிறிய அளவில் உணவகமா மாற்றணும். வீட்டு வாசலில் சாப்பிடுபவர்களை வீட்டிற்குள் அமர்ந்து சாப்பிட வைக்க வேண்டும். அதை நோக்கி தான் நாங்க இருவரும் பயணிக்கிறோம்’’ என்றார் அனிதா திடமாக.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

Related Stories: