போதை பொருள் புழக்கம் எதிரொலி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை; வடமாநிலத்தவர் தீவிர கண்காணிப்பு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறை தலைமைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து ஐஜி சந்திரன் உத்தரவின்பேரில் புதிய பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வப்போது பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், எஸ்ஐ முருகன் தலைமையில் போலீசார், ரயில்வே காவல்துறையினருடன் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

11.45 மணியளவில் பிளாட்பாரம் வந்தடைந்த புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி வெளியே வந்த பயணிகளில் சிலரை மடக்கி பரிசோதித்தனர். அவர்கள் வைத்திருந்த சூட்கேஸ், பேக், பைகள் உள்ளிட்டவற்றை வாங்கி திறந்து பார்த்து ஆய்வு செய்தனர். அப்போது வடமாநிலத்தில் இருந்து வந்திருந்த இளைஞர்களில் சிலர் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருந்த நிலையில் அவற்றை கைப்பற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தொடர் விசாரணையில் அவை தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அல்ல என்பது தெரியவரவே பின்னர் அந்த வாலிபர்களை போலீசார் விடுவித்தனர்.

Related Stories: