மருந்து தட்டுப்பாட்டால் உயிருக்கு போராடும் நோயாளிகள் ஐசியூ.வில் இலங்கை: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.450, டீசல் ரூ.445; உணவு பொருட்கள் விலையும் உயர்வு; உள்குத்து வேலையில் கோத்தபய தீவிரம்

இலங்கை ‘இல்லாத கை’யாக மாறிவிட்டது. கடும் பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வரலாறு காணாத சரிவு, உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என ஒரு நாட்டில் கிடைக்க வேண்டிய அனைத்து வளங்களும் இன்று இல்லை. ஒரு பக்கம் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கிய ரூ.4 லட்சம் கோடி கடன் தலையில் பெரிய சுமையாக உள்ளது. இன்னொரு பக்கம், வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய கூட அரசு கஜானாவில் பணம் இல்லை. இலங்கையின் தற்போதைய நிலைமையை சீரமைக்க குறைந்தது ரூ.32,000 கோடி தேவைப்படுகிறது.

இதற்கு சர்வதேச நிதியத்திடம் கூடுதல் நிதியை கோரி உள்ளது இலங்கை. அண்டை நாடுகளிடமும் கையேந்தி நிற்கிறது. எதிரிகளுக்கு கூட துரோகம் செய்யக்கூடாது என்ற மனப்பான்மையில், இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் மற்றும் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தியா வழங்கி உள்ளது. இருப்பினும், அங்கு தேவை அதிகமாக உள்ளதால், இந்தியாவின் உதவி போதவில்லை. நாடு இவ்வாறு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் நிலையில், பொருளாதாரத்தை மீட்டு மக்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பதவியை காப்பாற்றுவதிலும், எம்பி.க்கள் ஆதரவை திரட்டுவதிலும் மட்டுமே அதிபர் கோத்தபய ராஜபக்சே உள்ளார். புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பொருளாதாரத்தை மீட்க முயற்சித்து வருகிறார். ஆனால், அவரால் முடியவில்லை. அனைத்து கட்சி ஆட்சி அமைந்துள்ளதால், அவரால் சுதந்திரமாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

அதிபருக்கு வழங்கப்பட்ட உச்சப்பட்ச அதிகாரம்தான் நாட்டை இந்த அளவுக்கு சீரழிவு பாதைக்கு கொண்டு சென்றது என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்ச்சாட்டுகின்றனர். இதனால், அதிபரின் அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்துக்கே கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அரசியலமைப்பு 21வது சட்டத் திருத்தத்தை கொண்டு வர பிரதமர் ரணில் முயற்சி செய்கிறார். ஆனால், இந்த திருத்தத்துக்கு ஆளும் கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிகார வர்க்கம் என்றும் நம்மிடம் இருக்க வேண்டும் என்ற நோக்கில், அதிபர் கோத்தபயவே எம்பிக்களை தூண்டிவிடுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அவரின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாளுக்கு நாள் உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் திண்டாடி வருகின்றனர். பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்து உள்ளதால், பல்லாயிரக்கணக்கான மெட்ரிக் டன் எரிபொருள் அனுப்பினாலும், சில மணி நேரங்களில் தீர்ந்து விடுகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எரிபொருளை வாங்க கூட அரசிடம் காசு இல்லை. நாடு திவாலாகி கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் ஹல்தமுல்ல என்ற பகுதியில் பிறந்து 2 நாளே ஆன குழந்தை மஞ்சள் காமாலையால்  கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனத்திற்கு பெட்ரோல் கிடைக்காமல், சரியான  நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாததால், அந்த  குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதேபோல், பள்ளி தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில், பள்ளி வாகனங்களுக்கு டீசல் கிடைக்காததால், மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதில் கூட சிக்கல் நிலவுகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் அத்தியவாசிய மருந்துகள் இல்லாமல் நோயாளிகள் உயிருக்கு போராடி வருகின்றனர். மருந்துகள் இல்லாமல் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என டாக்டர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் பல உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை விலை உயர்வுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் (92) ஒரு லிட்டருக்கு ரூ.82, பெட்ரோல் (95) லிட்டருக்கு ரூ.77 உயர்த்தப்பட்டதன் மூலம் முறையே இவற்றின்விலை ரூ.420, ரூ.450 ஆக உயர்ந்துள்ளது. ஆட்டோ டீசல் ரூ.111, சூப்பர் டீசல் ரூ.116 உயர்த்தப்பட்டு, முறையே ரூ.400, ரூ.445 ஆக விற்கப்படுகிறது. பேக்கரி பொருட்கள், ஏனைய உணவுப் பொருட்களின் விலையும் 10 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. ஆட்டோ, சரக்கு கட்டணம் உள்ளிட்டவற்றின் வாடகை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பக்கம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, இன்னொரு பக்கம் கடுமையான விலையேற்றத்தால் இலங்கை தற்போது ஐசியூவில் உள்ளது.

* குடும்பத்துடன் மகிந்த மாலத்தீவுக்கு ஓட்டம்?

இலங்கையில் மக்களின் போராட்டத்துக்கு பணிந்து கடந்த 9ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த, கூலிப்படையை ஏவி போராட்டம் நடத்திய மக்களின் மீது தாக்குதல் நடத்தினார். மக்கள் திருப்பித் தாக்கியதால், தனது மகன் நமல் ராஜபக்சே மற்றும் குடும்பத்துடன் தப்பி, திரிகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்தார். சில நாட்களுக்கு பிறகு கொழும்பு அருகே ஒரு ரகசிய இடத்துக்கு அவர் இடம் பெயர்ந்தார். பின்னர், நாடாளுமன்றம் கூடிய 2ம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு அவர் வெளியில் தலையை காட்டவில்லை. இந்நிலையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசி உள்ளார்.  

அப்போது, இலங்கையில் இயல்பு நிலை திரும்பும் வரை மாலத்தீவில் குடும்பத்துடன் தஞ்சமடைய மகிந்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான உதவிகளை முகமது நஷீத் செய்து கொடுக்க உறுதியளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2012ம் மாலத்தீவு அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக அதிபர் பதவியில் இருந்து விலகிய முகமது நஷீத், குடும்பத்துடன் இலங்கையில் தஞ்சமடைந்தார். அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அவருக்கு உதவிகள் செய்தார். அதற்கு நன்றி கடனாக இப்போது மகிந்தவுக்கு முகமது நஷீத் உதவ முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

* எரிபொருளுக்காக இந்திய வங்கியிடம் ரூ.3850 கோடி கடன்  

இலங்கைக்கு ஏற்கனவே பலமுறை பெட்ரோல், டீசல், பணத்தை இந்தியா கொடுத்து உதவியுள்ளது. தற்போது, அன்னிய செலாவணி கடுமையாக சரிந்துள்ளதால், பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்ய இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து ரூ.3850 கோடி கடன் வாங்க இலங்கை அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. ஏற்கனவே, இந்த வங்கியிடமிருந்து ரூ.3850 கோடியும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடமிருந்து ரூ.1551 கோடியும் இலங்கை கடனாக பெற்றுள்ளது.  ஜூன் மாதம் முதல், எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கைக்கு ரூ.4,112 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* இலங்கையில் கடந்தாண்டு, இந்தாண்டு விலை உயர்வு ஒப்பீடு:

பொருட்கள் (1கிலோ)    2021 மே (ரூ.)    2022 மே (ரூ.)    விலை உயர்வு %

சிவப்பு அரிசி    101    211    109%

கோதுமை மாவு    92    253    175%

மைசூர் பருப்பு    209    528    153%

சர்க்கரை    117    236    102%

நாய் பிஸ்கட்    721    1486    106%

கோழி இறைச்சி    445    980    120%

முட்டை    15    29    93%

பிரெட்    57    130    128%

பீன்ஸ்    211    573    172%

புடலங்காய்    167    343    105%

பச்சை மிளகாய்    307    486    58%

பால் பவுடர்    380    790    108%

* எரிபொருள் விலை பட்டியல்

பொருட்கள்    டிச.2021 (ரூ.)    மே 2022 (ரூ.)    விலை உயர்வு %

பெட்ரோல் (1 லிட்டர்)    117    450    265%

டீசல் (1 லிட்டர்)    121    400    231%

சமையல் காஸ்

(12.5 கிலோ)    1493 (அக்.2021)    4860    226%

* இலங்கையை மீட்டெடுக்க ஆலோசனை  

2 நிறுவனங்களுக்கு ரூ.43 கோடி சம்பளம்

திவால் நிலையில் உள்ள இலங்கையை மீட்டெடுக்கும் வகையில், பொருளாதாரம் மற்றும் கடன் மறுசீரமைப்பிற்கு ஆலோசனை வழங்க முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான லசார்ட், கிளிபோர்ட் சான்ஸ் எல்எல்பி நிறுவனங்களை நியமிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இவற்றுக்கு ரூ.43 கோடி கட்டணம் வழங்கப்பட உள்ளது.

* புதிய நிதியமைச்சர் நியமிக்காதது ஏன்?

புதிய அமைச்சரவையில் ஒவ்வொரு கட்டமாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும், தற்போதைய சூழலில் இருந்து மீட்க திட்டம் வகுக்க வேண்டிய நிதியமைச்சர் மட்டும் நியமிக்கப்படவில்லை. பல்வேறு நிதிகளை ஒப்புதல் அளிக்க வேண்டிய முக்கியமான துறை என்பதால், தன்னுடைய  தீவிர ஆதரவாளருக்கே கொடுக்க வேண்டும் என்று அதிபர் கோத்தபய முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது. மகிந்த அமைச்சரவையில், அவரது சகோதரர் பசில் ராஜபக்சே நிதித்துறை அமைச்சராக இருந்தார். புதிய நிதி அமைச்சர் யார் என்று பரபரப்பு எழுந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிதித்துறைக்கு அமைச்சர் நியமிக்கும் வரை, அதிபர் கோத்தபயவே கூடுதலாக நிதித்துறையை கவனிப்பார் என்று அமைச்சரவை செய்தி தொடர்பாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

* எரிபொருள், காஸ் எடுக்க மன்னார் படுகையில் ஆய்வு

கடும் பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் கிடைக்காமல் இலங்கை தள்ளாடி வருகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல், காஸ் விலையும் எகிறிக் கொண்டே போகிறது. இந்நிலையில், அடுத்த 60 ஆண்டுகளுக்கு இலங்கையில் எரிசக்தி தேவைக்காக, இந்தியப் பெருங்கடலில் உள்ள மன்னார் வளைகுடா படுகையில், சுமார் 5 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவைக் கொண்ட, எண்ணெய் ஆய்வுக்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வை மேற்கொள்ள இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறுகையில், ‘இந்த பகுதியில் 2011ம் ஆண்டு முதல் முறையாக இயற்கை எரிவாயு வயல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையின் எரிசக்தி தேவைகளை தீர்க்கக்கூடிய இந்த பொக்கிஷத்தை நாடு இன்னும் பயன்படுத்தவில்லை. கடந்த வருடம் மன்னார் படுகை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து, மன்னார் படுகையில் எண்ணெய் அகழ்வாராய்ச்சி தொடர்பான ஆய்வுகளுக்கான சதித்திட்டங்களை விளம்பரப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2016ல் நடைபெற்ற பொதுக் கணக்குக் குழுவின் கண்டுபிடிப்புகளின்படி, மன்னார் படுகையில் சுமார் 5 பில்லியன் பீப்பாய்கள் எரிபொருளும், சுமார் 5 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவும் உள்ளது. இது, 60 ஆண்டுகள் வரை போதுமானது என்று தலைமை கணக்கியல் அதிகாரி தெரிவித்தார்’ என்று கூறினார்.

Related Stories: