ராமநாதபுரம் இளைய மன்னர் குமரன் சேதுபதி காலமானார்: இன்று உடல் அடக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் ராஜா என்.குமரன் சேதுபதி நேற்று காலமானார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா என்.குமரன் சேதுபதி (58), ராமநாதபுரம் அரண்மனையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் நேற்று காலை மாரடைப்பால் காலமானார். இவருக்கு லட்சுமி நாச்சியார் என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராமநாதபுரம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ராஜா என்.குமரன் சேதுபதி, அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக பதவி வகித்துள்ளார். மேலும் ராமநாதபுரம் கால்பந்து சங்கத் தலைவர், மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வந்தார். பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்  பகுதியை சேதுபதிகள் ஆண்டனர். முதலில் போகலூர், பின்னர் ராமநாதபுரத்தை  தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர். சேதுக்கரைக்கு அதிபதிகளாக திகழ்ந்ததால்  சேதுபதிகள் என அழைக்கப்பட்டனர்.

* முதல்வர் இரங்கல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘ராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா நாகேந்திர குமரன் சேதுபதி நேற்று காலை மாரடைப்பால் காலமான செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திருக்கோயில், கல்வி நிறுவன பொறுப்புகளில் சிறப்பாக சேவையாற்றி வந்த அவரது திடீர் இறப்பு ஈடுசெய்ய முடியாததாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: