அரக்கோணம் அருகே முட்புதரில் சடலங்கள் வீச்சு... காஞ்சிபுரம் தம்பதி அடித்துக்கொலை

* அதிர்ச்சியில் மகன், மகள் விஷம் குடித்தனர்

* குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே, காஞ்சிபுரம் தம்பதியை அடித்துக்கொன்று முட்புதரில் சடலங்கள் வீசப்பட்டன. இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற மகன், மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் சாலை கிராமத்தில் உள்ள மின்னல் ஏரிக்கால்வாய் முட்புதரில் நேற்று காலை ஆண், பெண் சடலங்கள் கிடப்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் முட்புதரில் கிடந்த சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர்களின் உடலில் இருந்த காயங்களை வைத்து, மர்மநபர்கள் அடித்துக்கொன்று முட்புதரில் சடலங்களை வீசியிருப்பது தெரியவந்தது. விசாரணையில் கொலையானவர்கள் காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசந்தாங்கல் பகுதியை சேர்ந்த பட்டு நெசவுத்தொழிலாளி மாணிக்கம்(52), அவரது மனைவி ராணி(47) என ெதரிந்தது.

இவர்களுக்கு சசிகலா(26) என்ற மகளும், பெருமாள்(24) என்ற மகனும் உள்ளனர். சசிகலா நர்சிங் படித்துள்ளார், திருமணமாகி விட்டது. பெருமாள் டிப்ளமோ படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். திருமணமாகவில்லை.மாணிக்கம் பிள்ளைகளின் படிப்பு, மகளின் திருமணத்துக்காக சிலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி உள்ளாராம். ஆனால் சரிவர வட்டி செலுத்த முடியாததால், கடன் கொடுத்தவர்கள் திருப்பிக்கேட்டு, தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால், தம்பதி விரக்தியுடன் இருந்துள்ளனர். இந்நிலையில், சோளிங்கருக்கு சென்று ஒருவரிடம் கடன் வாங்கி வருவதாக வீட்டில் மகன், மகளிடம் கூறிவிட்டு நேற்று முன்தினம் சென்றார்களாம். ஆனால் அவர்களிடமிருந்து இரவாகியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லையாம்.

இந்தநிலையில்தான் அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர். ராணியின் தாய்வீடு கைலாசபுரம் சாலை கிராமத்தில் உள்ளது. அவரது சகோதரர் மின்னலான் பாமக மாநில வன்னியர் சங்க துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா மற்றும் ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். குற்றாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கிடையில் தாயும், தந்தையும் கொலை செய்யப்பட்ட தகவலறிந்து அதிர்ச்சியடைந்த மகன் பெருமாள், மகள் சசிகலா ஆகிய இருவரும் காஞ்சிபுரத்தில் பூச்சி மருந்தை குடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அரக்கோணத்துக்கு வந்து கைலாசபுரம் சாலை கிராமத்தில் நேற்று மதியம் ரோட்டில் நடந்து செல்லும்போது, மயங்கி விழுந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டுஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தம்பதி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதிர்ச்சியில் மகன் மற்றும் மகள் பூச்சி மருந்து குடித்த சம்பவமும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்து பிரச்னையில் கொலையா?

டிஐஜி ஆனிவிஜயா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தம்பதியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? வேறு எங்காவது கொலை செய்து விட்டு இங்கு வந்து முட்புதரில்  வீசி சென்றார்களா? மேலும், இவர்களுக்கு கடன் தொல்லையா? சொத்து பிரச்னை ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றோம்’’ என்றார்.

சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு

குற்றவாளிகளை பிடிக்க அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படையினர் காஞ்சிபுரம், அரக்கோணம், கைலாசபுரம் சாலை, சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும், மாணிக்கம்- ராணி தம்பதி கடைசியாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: