சிந்தாதிரிப்பேட்டையில் பரபரப்பு...பாஜ எஸ்.சி., பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் வெட்டி கொலை: தப்பிய 3 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் பாஜ எஸ்.சி., பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை, சிந்தாரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய ஆதரவாளர்களுடன் பாஜவில் இணைந்துள்ளார். தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் பாஜவிற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக, நடிகை குஷ்புவுடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பாலசந்தர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் பாஜவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அப்போது, பாலசந்தருக்கு பாஜ எஸ்.சி., பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் இருந்ததால் தமிழக காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பாலசந்தர் தன்னுடைய பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் என்பவருடன்  சாமிநாயக்கன் தெரு, நித்யா ஹார்டுவேர்ஸ் அருகே நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அருகே உள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றிருந்தார். திடீரென மூன்று பேர் பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் கண் இமைக்கும் நேரத்தில் வந்து பாலசந்தரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். உயிர் பிழைக்க அவர் அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினார். ஆனால் மூன்று பேரும் விடாமல் துரத்தி சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இதில் பாலசந்தர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த பாலகிருஷ்ணன் ஓடி வந்தார். அதற்குள் 3 பேரும் மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். ெபாதுமக்களும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் சம்பவம் குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாலகிருஷ்ணன் சிந்தாதிரிப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாலசந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாஜ பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு ெசய்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு ெசய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், கொலை நடந்த சாமிநாயக்கன் தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை பெற்று தப்பியோடிய மூன்று பேரை தேடிவருகின்றனர். மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை காரணமாக, அப்பகுதியில் பதற்றம்  நிலவியதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாலசந்தருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. அதன்அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பாலசந்தர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் தீவிர ஆதரவாளர். தன்னுடைய கையில் அவரது பெயரை பச்சை குத்தியுள்ளார். இதனால்  அவருக்கு பாஜ எஸ்.சி., பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: