உகாண்டாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 5.56 கோடி ஹெராயின் பறிமுதல்: சர்வதேச கும்பலை சேர்ந்தவர் கைது

சென்னை:  உகாண்டா நாட்டிலிருந்து ஷார்ஜா வழியாக விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த ₹5.56 கோடி மதிப்புடைய 795  கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்ததாக உகாண்டாவை சேர்ந்த சர்வதேச போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். வெளிநாட்டில் இருந்து பெரிய அளவில் போதைப்பொருள்  சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி அதிகாலை ஷார்ஜாவிலிருந்து அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் உகாண்டாவை சேர்ந்த லவுபன் (42) என்ற ஆண் பயணி வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடமைகளில் எதுவும் இல்லை. அவரை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, வயிற்றுக்குள் கேப்ஸ்சூல் மாத்திரைகள் விழுங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுங்க அதிகாரிகள், உகாண்டா பயணியை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு இனிமா கொடுத்து சிறிது சிறிதாக வயிற்றுக்குள் இருந்த கேப்சூல்களை வெளியில் எடுத்தனர். இவ்வாறு 4 நாட்களாக மொத்தம் 63 கேப்சூல் மாத்திரைகளை வெளியே எடுத்தனர். அந்த கேப்சூல்களை உடைத்து பார்த்தபோது மொத்தம் 694.64 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ₹5.56 கோடி. மேலும் விசாரணையில் லவுபன் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: