சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர் தூவினார்

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நடப்பாண்டு மே 24ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டார். அணையின் வலது கரையில் உள்ள 8 கண் மதகு வழியாக காலை 11.15 மணிக்கு மின்விசையை அழுத்தி தண்ணீரை திறந்து விட்டு, மதகு வழியாக சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்களை தூவினார். முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 2வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீரை திறந்து வைத்துள்ளார்.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்பி.,க்கள் பார்த்திபன், ராஜேஸ்குமார், சின்ராஜ், பொன்கவுதமசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 அணையில் இருந்து முதலில் 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நீர்திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என்றும், இன்னும் 3 நாளில் தண்ணீர் கல்லணையை சென்றடையும் என்றும் அடுத்த ஒரு வாரத்தில் கடைமடை பகுதியை சென்றடையும்என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  முன்னதாக தான் தங்கியிருந்த மேட்டூர் ராமன்நகர் விடுதியில் இருந்து 10.30 மணிக்கு காரில் அணைக்கு புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழியெங்கும் பொதுமக்கள், விவசாயிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். காரை மெதுவாக இயக்கச்செய்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடத்தில் மக்கள் வெள்ளத்தில் கடந்து வந்த முதல்வர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மேட்டூர் அணைக்கு வந்த முதல்வருக்கு சால்வை அணிவித்து விவசாய சங்க பிரதிநிதிகள் வரவேற்றனர். அணையில் தண்ணீரை திறந்து வைத்த பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அணையின் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார்.

 மேட்டூர் அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக குறித்த காலமான ஜூன் 12ம் தேதி 18 ஆண்டுகளும், ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக 10 ஆண்டுகளும், காலதாமதமாக 60 ஆண்டுகளும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த முறை 11வது ஆண்டாக குறிப்பிட்ட நாளுக்கு முன்கூட்டியே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1947க்கு பிறகு மே மாதத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது இதுவே முதல்முறை. கடந்த ஆண்டு (2021) ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இதில் 28.1.22 வரை 129 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் டெல்டாவில் குறுவை சாகுபடியில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பயன்பெறுகிறது. இவை தவிர சம்பா, தாளடி என முப்போக விளைச்சலும் இந்த ஆண்டு அமோகமாக இருக்கும் என டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அணை நீர்மட்டம் 117.76 அடியாக உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதேநிலையில் நீடித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 12,777 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,508 கனஅடியாக சரிந்தது. திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 117.28 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 117.76 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 89.94 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: