பெரியகுளம் அருகே வராக நதி படுகையில் குவிக்கப்படும் குப்பை ஊராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

பெரியகுளம் : பெரியகுளம் அருகே, வராக நதி ஆற்றுப்படுகையில், குப்பைகளை குவிப்பதால் நீர்நிலை மாசுபடுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியகுளம் அருகே, மேல்மங்கலம் கிராமத்தில் வராக நதியில் வரும் நீரை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.

இந்நிலையில், மேல்மங்கலம் ஊராட்சியில் தினசரி சேகரமாகும் குப்பைக் கழிவுகளை அருகே உள்ள வராகநதி ஆற்றில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால், ஆற்றுப் பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. மேலும், ஆற்றில் குப்பைகளை கொட்டுவதால், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நேரங்களில் அனைத்து பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளையும் அடித்துக் கொண்டு வந்து விவசாய நிலங்களில் சேர்க்கிறது.

இதனால் விவசாய நிலங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி துர்நாற்றம் வீசுவதுடன் மண்வளம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், வராக நதியைச் சுற்றியுள்ள பல்வேறு விவசாய நிலங்கள் மற்றும் பல கிராம பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. வராக நதியில் குப்பைகளை கொட்டி நீர் மாசடைவதுடன் மண்வளத்தை கெடுத்தும் பொதுமக்களின் உடல் நலத்திற்கும் சுகாதாரக்கேடு விளைவித்தும் வருகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் ஆற்றில் குப்பை கொட்டுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: