கூடுதல் பொருளாதார தடை விதித்ததற்கு பதிலடி; கனடா பிரதமரின் மனைவி ரஷ்யாவிற்குள் நுழைய தடை

மாஸ்கோ: கூடுதல் பொருளாதார தடைகளை விதித்ததால், கனடா பிரதமரின் மனைவி உள்ளிட்ட சிலர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் உள்ளிட்டோர் அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளுக்கு வருவதை தடுக்கும் வகையில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கனடா பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ,  கனடா நாட்டின் ராணுவ தளபதி எரிக் ஜீன் கென்னி மற்றும் 24 கனடா அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

ரஷ்யாவிற்கு எதிராக கனடா அறிவித்துள்ள கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைமை, ராணுவம் மற்றும் வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களும் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் பிடன் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உட்பட 963 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: