பாலப்பணிகள் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் ஆய்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலையில் வெங்கச்சேரி மாகரல் இடையே செய்யாற்று தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக வலுவிழந்து உடைந்தது. இதனால் உத்திரமேரூர் காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து வெங்கச்சேரி மாகரல்  இடையே தற்காலிக பாலம் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. மேலும்  ரூ.23.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமான மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் தலைமையில் கோட்ட பொறியாளர் அருணா, உதவிக் கோட்டப் பொறியாளர்கள் அஜித்குமார், ராஜேந்திரன், கோவிந்தராஜன் ஆகிய உள்தணிக்கை குழுவினர்கள் பாலப்பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பாலம் அமைக்கப்படும் முறைகள் மற்றும் தரமான பொருட்களால் பாலப்பணிகள் நடைப்பெறுகின்றனவா உள்ளிட்டவைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். நிகழ்வின் போது நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: