தேசிய பங்குச்சந்தையில் மோசடி 15 முக்கிய நகரங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு

புதுடெல்லி: தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனை தொடர்ந்து பங்கு சந்தையின் இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் சர்வர் கட்டமைப்பு மூலம் சந்தைத் தரவுகளை முன்னுரிமையாக ஒரு தரகருக்குத் திறந்து விட்டதாக கடந்த 2018 மே மாதம் தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த மார்ச் 7ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதே வழக்கில் தேசியப் பங்குச் சந்தையின் குரூப் ஆபரேட்டிங் அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியன் கைது செய்யப்பட்ட சில நாள்களிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் அவரது தனிப்பட்ட ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பங்குச் சந்தையின் முக்கிய இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்புடைய இடங்களில் சிபிஐ நேற்று அதிரடி சோதனையை மேற்கொண்டது.

மும்பை காந்திநகர், டெல்லி, நொய்டா, குருகிராம் கொல்கத்தா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நகரங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ரெய்டின் போது பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த முறைகேடு விவகாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சிபிஐ நடத்தியுள்ள இந்த சோதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Related Stories: