6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து சிறப்பு திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் தொடங்கி வைத்தார்

ஊட்டி: தமிழக சட்டபேரவையில் அறிவித்த 15 நாட்களில், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவ முகாமை ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம். மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது’’ என அறிவித்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அறிவித்த 15 நாட்களில் ‘‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற அந்த புதிய திட்டத்தை நீலகிரி மாவட்டம் முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். மேலும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமையும் அவர் தொடங்கி வைத்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்து முகாமை பார்வையிட்டார். நேற்று முதல்வர் துவக்கி வைத்த இந்த சிறப்பு திட்டமானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாதத்திற்குள் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின்படி கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படும் குழந்தைகளின் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். அந்த மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஊட்டச்சத்து மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஊட்டியில் நடந்த ‘‘ஊட்டச்சத்தை உறுதி செய்’’ திட்ட துவக்க நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ராசா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் திட்ட இயக்குநர் அமுதவல்லி, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: