காட்டு யானையை விரட்ட கொண்டு வந்த கும்கி யானைகள் திருப்பி அனுப்பி வைப்பு

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பண்ணைப்பட்டி, கோம்பை, அமைதிச்சோலை, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட மலைகிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மலைக்கிராமங்கள் மற்றும் மலையடிவார கிராம பகுதிகளுக்குள் அவ்வப்போது புகும் காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சில தினங்களுக்கு கன்னிவாடி வனப்பகுதியில் திரியும் ஒற்றை காட்டு யானை தாக்கியதில், வனத்துறை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் காட்டுயானையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து அடர்ந்த வனப்பகுதிக்கு ஒற்றை காட்டுயானையை விரட்ட, ஊட்டி டாப்சிலிப் முகாமில் இருந்து கலீம் மற்றும் சின்னத்தம்பி ஆகிய கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து காட்டுயானையை விரட்டும் பணியில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் பருவ கால மாற்றம் மற்றும் மஸ்து அதிகரிப்பால் சின்னதம்பி என்ற கும்கி யானை பாகன் இடும் கட்டளையை கேட்காமல் சண்டித்தனம் செய்தது. இதனையடுத்து மருத்துவ குழுவினரின் பரிந்துரையின்பேரில் டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு சின்னத்தம்பி யானை முதலில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கும்கி யானை கலீமுக்கும் மஸ்து அதிகரித்தது. இதனையடுத்து கும்கி யானை கலீமும், டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் காட்டு யானை அச்சத்தில் மலைக்கிராம மக்கள் இருந்து வருகின்றனர். இதுகுறித்து கன்னிவாடி வனப்பகுதியைச் சேர்ந்த மலைகிராம மக்கள் கூறுகையில், ‘‘கும்கி யானைகளை கொண்டு வந்தும், அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க முடியவில்லை. ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் நடமாடுகிறதா? அல்லது அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதா? என்று தெரியாமல் பயத்துடன் நடமாடி வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: