பாலியல் உறவால் வேகமாக பரவும் ‘மங்கிபாக்ஸ்’..! ஐரோப்பிய நாடுகளில் பீதி; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

நியூயார்க்: அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது ‘மங்கிபாக்ஸ்’ என்ற வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக பாலியல் உறவால் தொற்று வேகமாக பரவுவதால், முன்னெச்சரிக்கையுடன் இருக்க உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்று பரவல் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிய நிலையில், தற்போது ‘மங்கிபாக்ஸ்’ என்ற வைரஸ் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசானது முதன்முதலில் கடந்த 1958ம் ஆண்டு கோபன்ஹேகனில் உள்ள ஸ்டேட் சீரம்  இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற சைனோமோல்கஸ் குரங்குகளின் கால்களில் இருந்து  கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பெரியம்மை, கவுபாக்ஸ், குதிரைப்புலி மற்றும் ஒட்டகம் போன்ற விலங்குகளால் பரவும் நோய்களுடன் தொடர்புடையது.

தொடர்ந்து 1966ம்  ஆண்டில் ரோட்டர்டாமில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்த குரங்கிடம் இருந்து இந்நோய் பரவியது. ஆப்பிரிக்க  நாடுகளில் மட்டுமின்றி, 2003ம் ஆண்டில், அமெரிக்காவில் மங்கிபாக்ஸ் வைரஸ்  பரவியது. கிட்டதட்ட 47 பேர் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு  அவர்களுடைய செல்லப் பிராணிகளிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவியது.  அதேபோல் நைஜீரியாவில் மங்கிபாக்ஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் 2018ல் இஸ்ரேலுக்கும், 2018ல் லண்டனிலும், 2019ல் சிங்கப்பூரிலும்,  நைஜீரியாவிலிருந்து வந்த பயணிகளின் மூலம் மங்கிபாக்ஸ் பரவியது.

கடந்த 1980ம் ஆண்டு வாக்கில் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறினாலும் கூட தற்போது மங்கிபாக்ஸ் தொற்று அறிகுறி வேகமாக பரவி வருகிறது. இந்த மங்கிபாக்ஸ் வைரஸ் உடலுக்குள் உயிர் வாழும் காலகட்டம் 6 முதல் 13 நாட்கள் ஆகும். இதற்கு இடைபட்ட காலகட்டத்தில் பரவத் தொடங்கி, தொற்றை அதிகரிக்கச் செய்யும். நோய்த்தொற்றின் தீவிர நிலையின் போது பெரியம்மையை போல கண்ணாடி போன்ற திரவங்கள் நிரம்பிய பெரிய கொப்புளங்கள் உண்டாகும். அது உடையும்போது மெல்லிய மஞ்சள் நிற திரவம் வெளியேறும்.

குரங்கு மற்றும் பிற வன விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அதன்பின் நோய்த்தொற்று மனிதர்களிடமிருந்து பிற மனிதர்களுக்குப் பரவ ஆரம்பிக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இளம் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இம்மாத தொடக்கத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 10க்கும் அதிகமானோருக்கு ‘மங்கிபாக்ஸ்’ வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. பாலியல் உறவால் இந்த வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் 40க்கும் அதிகமானோருக்கும், கனடாவில் 12க்கும் அதிகமானோருக்கும், பிரிட்டனிலில் இதுவரை 9 பேருக்கும் மங்கிபாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் நேற்று ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நோய் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு பாலியல் உறவால்தான் தொற்று பரவியிருப்பதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சுகாதாரத்துறை அதிகாரிகளின் தரவுப்படி, தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கும், இருபாலின சேர்க்கை பழக்கமுடையவர்களிடையே தொற்று அதிகம் பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் இந்த வார துவக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவன உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் சோஸ் ஃபால் கூறுகையில், ‘ஆணுடன் ஆண் உடலுறவு கொள்பவர்களிடையே தொற்று அதிகம் பரவியிருப்பதை காணமுடிகிறது. மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் மங்கிபாக்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சில வாரங்களில் குணமடைந்துள்ளனர். மிகச்சிலரே அரிதாக உயிரிழந்தனர். மங்கிபாக்ஸ் வைரஸ் காய்ச்சலுக்காக, குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகள் தங்க வேண்டும்; இதனால் நோய்த்தொற்று  பரவாது. அவர்களுக்கு பொதுவான சிகிச்சையளித்து குணமாக்க முடியும்’ என்றார்.

Related Stories: