கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிருஷ்ணகிரியில், சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள முல்லை நகரில் இன்று வயது முதிர்ந்த பெண் குரங்கை நாய்கள் துரத்தி உள்ளது. வயது முதிர்ந்த குரங்கால் வேகமாக ஓட முடியவில்லை. நாய்கள், குரங்கை சுற்றி வளைத்து கடித்து குதறியது. காப்பாற்ற வந்த மற்ற குரங்குகளையும், பொதுமக்களையும் கடிக்க துரத்தியது. நாய்கள் கூட்டத்திடம் சிக்கிக்கொண்ட வயது முதிர்ந்த குரங்கு உயிருக்கு போராடியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

ஆனால் வனத்துறையினர் ஒரு மணி நேரம் ஆகியும் வரவில்லை. மேலும் தாங்கள் வெளியில் இருப்பதாகவும் பிறகு வந்து பார்த்துக் கொள்கிறோம் என அலட்சியமாக கூறியுள்ளனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய குரங்கை மீட்க சென்ற பொதுமக்களை குரங்குகள் கூட்டம் நெருங்க விடவில்லை. சிறிது நேரத்தில் உயிருக்கு போராடிய குரங்கு இறந்துவிட்டது. தகவலின் படி அங்கு வந்த அறம் சிகரம் தொண்டு நிறுவனம் கோபிநாத் குரங்கின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி கார்வேபுரம் ஏரிக்கரையோரம் அடக்கம் செய்தார். இறந்துபோன குரங்குக்கு அப்பகுதியில் உள்ள மக்கள்  மாலை அணிவித்து, மலர் தூவி பால் ஊற்றி,  தேங்காய் உடைத்து ஊதுபத்தி கொளுத்தி இறுதி சடங்கு செய்தனர்.

Related Stories: