மழையால் களை இழந்த வாசன திரவிய கண்காட்சியை மழை காலத்திற்கு முன்னமே நடத்த கோரிக்கை

கூடலூர்:  கூடலூரில் நடந்த வாசனை திரவிய கண்காட்சி மழையால் களை இழந்தது. இதனால் மழைகாலத்திற்கு முன்னதாகவே நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.கூடலூரில் கடந்த 13ம் தேதி  துவங்கி 15ம் தேதி வரை 3 நாட்கள் கோடைவிழா வாசனை திரவிய கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதிற்காக  இந்த வருடம் மாணிங் ஸ்டார் பள்ளி மைதானத்தில் மிக பிரமாண்ட  ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ஆனால் தொடர் மழையால் இங்கு வந்த மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.  கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்ட மைதானம் களை இழந்து  தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பார்வையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 கண்காட்சியில் ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த அதன் உரிமையாளர்கள், மழை காரணமாக எதிர்பார்த்த வருமானம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

கூடலூர் பகுதியில் வழக்கமாக மே மாதத்திலேயே மழைக்காலம் துவங்கி விடுகிறது. ஏப்ரல் மாத இறுதி மற்றும் மே மாதங்களில் கோடை மழையின் தாக்கம் அதிகமாக காணப்படும். அதேபோல் இந்த வருடமும் ஏப்ரல் மாதத்தில் துவங்கிய கோடைமழை தொடர்ச்சியாக பெய்தது. 15ம் தேதி மட்டும் மழை குறைந்ததால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.   வாசனை திரவிய கண்காட்சியை வரும் காலங்களில் மழைக்காலத்திற்கு முன்னதாகவே நடத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: