ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழை: தாவரவியல் பூங்கா நுழைவாயிலில் வெள்ளத்தால் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி:  ஊட்டியில் நேற்று பகலில் கனமழை கொட்டிய நிலையில் தாவரவியல் பூங்கா நுழைவாயில் பகுதியில் மழைநீர் கழிவுநீருடன் பெருக்கெடுத்து ஓடி வெள்ளக்காடான நிலையில் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள சாலையின் நடுவே பாதாள கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இதில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு நுழைவாயில் பகுதியில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.

ஊட்டியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று மதியம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். பூங்காவில் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். கனமழை பெய்ததால் மழைநீர் பெருக்கெடுத்து பூங்கா வளாகத்திற்குள் ஓடியது. மேலும் நுழைவாயில் பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதனால் மழை நின்ற பின் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே நுழையும் பகுதி வழியாக வர முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமமடைந்தனர்.

பூங்காவில் இருந்து வெளியேறிய சுற்றுலா பயணிகளும் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் காரணமாக செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே மழை பெய்யும் சமயங்களில் நுழைவாயில் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: