வானூர் அருகே கழுப்பெரும்பாக்கத்தில் வவ்வால்களின் சரணாலயமாக திகழ்ந்த 250 ஆண்டுகால ஆலமரம் சாய்ந்தது

வானூர்: வானூர் அருகே கழுப்பெரும்பாக்கம் கிராமத்தில் வவ்வால்களின் சரணாலயமாக திகழ்ந்த 250 ஆண்டுகால ஆல மரம் மழையில் வேரோடு சாய்ந்தது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கழுப்பெரும்பாக்கம் கிராமத்தின் முக்கிய சாலையின் அருகே சுமார் 250 ஆண்டுகால ஆலமரம் இருந்தது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கில் வவ்வால்கள் தங்கி இருந்தது. இதனால் இந்த கிராமத்தில் தீபாவளி மற்றும் முக்கிய விழாக்களில் பட்டாசு வெடிப்பது இல்லை. மேலும் விழா காலங்களில் மேளதாளங்கள் இசைப்பதும் இல்லை. தங்களது இன்ப, துன்பங்களை மறந்து பறவைகளின் சரணாலயமாக அந்த கிராம பொதுமக்கள் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையில் இந்த ஆல மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் அந்த மரத்தில் இருந்த வவ்வால்கள் பதறி பறந்து சென்றன. மின்சாரம் தடைபட்டதால் உடனடியாக அப்பகுதி மக்கள் மின் ஊழியர்கள் துணையுடன் இயந்திரம் மூலம் மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். வவ்வால்களின் சரணாலயமாக இருந்த மரம் சாய்ந்தது, அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: