விராலிமலையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்; 800 காளைகள் சீறி பாய்ந்தன

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பட்டமரத்தான் கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக கடந்த சில நாட்களாக வாடிவாசல், பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்வையிடும் வகையில் மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

இறுதியில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இன்று காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளைகளும் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டி மாடுபிடி வீரர்கள் அடக்கினர். பல காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து களத்தில் நின்று விளையாடியது.

களத்தில் காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு அங்கே 5 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம், தங்க காசு, வெள்ளி காசு, மின்விசிறி, கிரைண்டர், குக்கர், கட்டில், சில்வர் பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியை பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி அருள்மொழி அரசு தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார்  ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: