கனமழை எதிரொலி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு-412 மி.மீ. மழை பதிவு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக, கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை கடும் வெயில் வாட்டி வதைத்தது. மாலை 6.30 மணியளவில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் தென்பெண்ணை ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக, கிருஷ்ணகிரி அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 48.05 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 741 கன அடியாக உள்ளது.

இதே போல், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 39.85 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அணைக்கு 504 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 560 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, நேற்று முன்தினம் இரவு, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்ட வெள்ள அபாய எச்சரிக்கையில், ‘பாதுகாப்பு கருதி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட வேண்டியுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என என தெரிவித்தார்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி, பல்வேறு பகுதிகளில் பதிவான மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்): பாரூரில் 73, பெனுகொண்டாபுரம் 55.40, தேன்கனிக்கோட்டை 54, சூளகிரி 40, கிருஷ்ணகிரி 38.80, ஓசூர் 37, போச்சம்பள்ளி 30.20, நெடுங்கல் 30, ராயக்கோட்டை 27, ஊத்தங்கரை 13, அஞ்செட்டி 8.60, தளி 5 என மொத்தம் 412 மிமீ மழை பதிவாகியிருந்தது.

Related Stories: