பள்ளிகொண்டா டோல்கேட்டில் போலீஸ் சோதனை பெங்களூருவில் இருந்து லோடு ஆட்டோவில் கடத்திய ₹5.70 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்-2 பேர் அதிரடி கைது: டிரைவர் தப்பியோட்டம்

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா டோல்கேட்டில் நடத்திய வாகன சோதனையில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு லோடு ஆட்டோவில் கடத்திய ₹5.70 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா டோல்கேட்டில் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில், தலைமைக்காவலர் சாம்சந்திரசேகர், காவலர் அன்பரசன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி வந்த ஒரு லோடு ஆட்டோவை சோதனைக்காக தடுத்து நிறுத்தினர்.

இதைப்பார்த்த லோடு ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். போலீசார் அவரை விரட்டி பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து போலீசார் ஆட்டோவில் இருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.

பின்னர், லோடு ஆட்டோவை சோதனையிட்டதில் தவிடு மூட்டைகளுக்கு நடுவே சுமார் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இவற்றின் மதிப்பு ₹5.70 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கணிக்கோட்டை, ஜோகாரப்பள்ளி கூட்டூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(22), வேல்முருகன்(24) என்பதும், தப்பியோடிய டிரைவர் ஓசூர் பகுதியை சேர்ந்த நாகேஷ்(24) என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஆட்டோவுடன் குட்கா மற்றும் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், வேல்முருகன் இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான டிரைவர் நாகேஷை தேடி வருகின்றனர்.

Related Stories: