பாலக்கோடு அருகே ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம்; சிசிடிவி கேமராவில் சிக்கியது-பொதுமக்கள் பீதி- வனத்துறையினர் எச்சரிக்கை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி காவேரியப்பன் கொட்டாய் பகுதியில், சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த சிறுத்தை நள்ளிரவு அல்லது அதிகாலை 2 மணி அளவில் மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து, கோழிகளை பிடித்து தின்று வருகிறது. கடந்த சில நாட்களில் 5க்கும் மேற்பட்ட கோழிகளை பிடித்து தின்றுள்ளது. இவ்வாறு கூண்டுக்குள் இருக்கும் கோழிகளை, சிறுத்தை பிடித்து தின்னும் காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானது.

இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் கேவி.அப்பலோ நாயுடு உத்தரவின்பேரில், பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் தலைமையில், வனக்குழுவினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில், கால் தடயங்களை சேகரித்தனர். இதில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து, நேற்று பாலக்கோடு வனத்துறையினர், காவேரியப்பன் கொட்டாய் மற்றும் அப்பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் வீடு, வீடாகச்சென்று சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், இரவு நேரத்தில் வீட்டை வீட்டு யாரும் வெளியே வரவேண்டாம், ஆடு, மாடுகளை பாதுகாப்பாக கட்டி வைத்துக்கொள்ள வேண்டும், வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு கால்நடைகளை தனியாக அழைத்துச்செல்லக்கூடாது, வீட்டின் வெளியே கட்டில்போட்டு தூங்கக்கூடாது என கூறி எச்சரிக்கை விடுத்தனர். வனவிலங்குகளை துன்புறுத்தும் வகையில் மின்வேலி, விஷம், வாய்வெடி, வலை வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘பாலக்கோடு அருகே காவேரியப்பன் கொட்டாய் பகுதியில் உள்ள மலைக்குன்றுகளில், கடந்த சில மாதங்களாக சிறுத்தை இருந்துள்ளது. தற்போது மலையை ஒட்டியுள்ள கிராமங்களில், அந்த சிறுத்தை நடமாட தொடங்கியுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க ஆலோசித்து வருகிறோம்,’ என்றனர்.

Related Stories: