வாஷியின் கடைசி ஓவரில் ரஸ்சல் பேட் செய்ய பிரார்த்தனை செய்தோம்: கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி

புனே: ஐபிஎல் தொடரில் புனேவில் நேற்று நடந்த 61வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரஸ்சல் ஆட்டம் இழக்காமல் 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 49 ரன் எடுத்தார். சாம்பில்லிங்ஸ் 34, ரகானே 28, நிதிஷ் ரானா 26 ரன் எடுத்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் உம்ரான் மாலிக் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களே எடுத்தது.

இதனால் கேகேஆர் 54 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 43, மார்க்ரம் 32 ரன் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். கேகேஆர் பந்துவீச்சில் ரஸ்சல் 3, சவுத்தி 2 விக்கெட் வீழ்த்தினர். ரஸ்சல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 13வது போட்டியில் 6வது வெற்றியை பெற்ற கேகேஆர் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. 7வது தோல்வியை சந்தித்த ஐதராபாத் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. வெற்றிக்கு பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், இந்த போட்டியில்  நாங்கள் வந்த மனநிலை, அது மிகச் சிறப்பாக இருந்தது. எல்லா வீரர்களும் சரியான விஷயங்களைச் செய்தார்கள், அச்சமின்றி விளையாடினர்.

இங்கு டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானது. இங்கு நடந்த பல போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் வெற்றி பெற்றுள்ளன. ரஸ்சலுக்கு முடிந்த அளவு ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டும் என்று திட்டம் இருந்தது, மேலும் வாஷிங்டனுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்ததால் கடைசி ஓவரை ரஸ்சல் விளையாட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம். சாமும் நன்றாக பேட்டிங் செய்தார். 177 ரன் சமமான ஸ்கோர் தான். நரேன், வருண் நன்றாக பந்துவீசினர். புத்திசாலித்தனமாக பந்துவீசி முக்கியமான விக்கெட்டுகளைப் பெற்றனர். இப்போதைக்கு எங்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை, கடைசி போட்டியிலும் சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன்’’ என்றார்.

Related Stories: