ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

சேலம்: சேலத்தில் நேற்று பெய்த கனமழையால், ஏற்காடு மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, வாகனங்கள் மாற்று பாதையில் செல்லுமாறு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலத்தில் நேற்று மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணி முதல் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. மழையால் கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி, குகை, கருங்கல்பட்டி, புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், சாரதா கல்லூரி சாலை, 4 ரோடு, 5 ரோடு உள்பட தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை கொட்டி தீர்த்தது. ஏற்காட்டில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக, ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலத்திலும், 40 அடி பாலத்தின் இடையிலும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை முழுவதும் மண் மற்றும் கற்கள் விழுந்து கிடப்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலறிந்ததும், போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதனிடையே, மண் சரிவு காரணமாக விபத்து அபாயம் ஏற்படாமல் இருக்க, கோரிமேடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் அடிவாரம் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதையடுத்து, செவ்வாய்பேட்டை, ஏற்காடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர். பின்னர், பாதிப்பு எதுவும் இல்லாததால் திரும்பி வந்தனர். தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையினர், மலைப்பாதையில் மண் சரிவை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, மண்சரிவு காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையில் சரிந்து விழுந்துள்ள மண் மற்றும் பாறைகளை அப்புறப்படுத்தி, சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் நிறைவடையும் வரை, ஏற்காட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், மாற்று பாதையான குப்பனூர் சாலையில் செல்லுமாறு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: