திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வடை, பாயாசத்துடன் 3 ஆயிரம் பேருக்கு தினமும் அன்னதானம்; விரைவில் அமலுக்கு வருகிறது

திருவண்ணாமலை: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமான திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. அதன்படி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அண்ணாமலையார் கோயிலில் தற்போது தினமும் மதியம் ஒரு வேளை மட்டும் அதிகபட்சம் 300 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள நாள் முழுவதும் அன்னதான திட்டத்தின் மூலம், நாளொன்றுக்கு அதிகபட்சம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதையொட்டி, ராஜகோபுரம் அருகே 5ம் பிரகாரத்தில் ஏற்கனவே அமைந்துள்ள அன்னதான கூடம் விரிவுபடுத்தப்படுகிறது. தற்போதுள்ள அன்னதான கூடத்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 150 மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும். எனவே, ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அன்னதான கூடம் விரிவுபடுத்தப்படுகிறது. அதோடு, விரைவாக சமைப்பதற்கான நவீன சமையல்கூட வசதிகளும் மேம்படுத்தப்படுகிறது.

மேலும், காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பந்தியிலும் சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல் ஆகியவை இடம் பெறும். வெள்ளிக்கிழமை மட்டும் உணவுடன் வடை, பாயாசம் வழங்கப்படும். மேலும், விசேஷ நாட்களில் மட்டும் கூடுதலாக இனிப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மதியம் ஒரு வேளை மட்டுமே அன்னதானம் வழங்கியதால், பலரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், தற்ேபாது நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருவதால், பக்தர்களின் நீண்டகால ஏக்கம் நிறைவேறியிருக்கிறது.

Related Stories: