சேலம் உள்பட 3 மாவட்டங்களில் மரவள்ளி சாகுபடி தீவிரம்-விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் : சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் பருவ மழை கை கொடுத்துள்ளதால் மரவள்ளி சாகுபடி தீவிரமடைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு  லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் ஆண்டும் முழுவதும் மரவள்ளிக்கிழங்கு அறுவடை நடக்கிறது. இவ்வாறு அறுவடை செய்யப்படும் மரவள்ளியானது சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு மரவள்ளியில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி உணவுக்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஸ்டார்ச்சில் இருந்து குளூகோஸ், முகத்திற்கு பூசும் பவுடர், மாத்திரை உள்பட பல்ேவறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு பெய்த மழையால் சேலம், நாமக்கல், தர்மபுரி  மாவட்டங்களில் மரவள்ளி சாகுபடி தீவிரமடைந்துள்ளது.

இது குறித்து மரவள்ளி விவசாயிகள் கூறுகையில், ‘‘மரவள்ளியை பொறுத்தமட்டில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.

வாரத்தில் இரண்டு நாள் தண்ணீர் கட்டினால் நல்ல விளைச்சலை தரும். கடந்தாண்டு பெய்த பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் இன்னும் குறையாமல் உள்ளது. அதனால் ஆத்தூர், வாழப்பாடி, மேச்சேரி, பனமரத்துப்படி உள்பட பல பகுதிகளில் மரவள்ளி சாகுபடி அதிகரித்துள்ளது. மற்ற பயிர்கள் தண்ணீர் இல்லை என்றால் பயிர் கருகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆனால் மரவள்ளியை  பொறுத்தமட்டில் பெருமளவில் நஷ்டத்தை தராது. அதனால் விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்,’’ என்றனர்.

Related Stories: