புதுவையில் பரபரப்பு போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய வாலிபர்

*10 பைக்குகள் சேதம்- 5 பேர் காயம்: மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்

புதுச்சேரி :  புதுவை பாண்டி மெரினாவில் இருந்து ஒரு சொகுசு நேற்று இரவு 8 மணியளவில் புறப்பட்டது. அந்த கார், அதிவேகமாக தாறுமாறாக சாலையில் சென்றது. சோனாம்பாளையம் சந்திப்பு, ரயில் நிலையம் சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை துரத்தினர்.

அந்த காரை, ரயில் நிலையம் அருகே மடக்கி, கற்களால் அடித்து நொறுக்கினர். காரை ஓட்டிச்சென்ற நபர், குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவரையும் சரமாரி கைகளால் தாக்கினர். பின்னர், ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், அவரை மீட்டு புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தனர்.

கார் மோதியதில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தது. நடந்து சென்ற மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற புதுச்சேரி சந்தா சாகிப் வீதியை சேர்ந்த அப்துல்காதர் மகன் ஜாவித் ஹசன் (17), உப்பளம் நேதாஜி நகர் ரெஜிஸ் (38), தில்லை மேஸ்திரி வீதி ஜோசப் (40), தவளக்குப்பம் மணிகண்டன் (19), தேங்காய்திட்டு சோழன் (47) மற்றும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தியதில், காரை ஓட்டிச் சென்றது புதுவை முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற நண்டு ஆறுமுகம் (45) என தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: