சீனா ஓடுபாதையில் தீப்பிடித்த விமானம்: 40 பயணிகள் காயம்

பீஜிங்: சீனாவில் ஓடு பாதையில் பயணிகள் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தென்மேற்கு சீனாவின் சோங்கிங் விமான நிலையத்தில் இருந்து 113 பணிகள், 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 122 பேருடன் நைங்சீ செல்ல புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் சிறிது தூரம் சென்றதும், ஓடுபாதையில் இருந்து விலகி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த விமானிகள் உடனடியாக விமானத்தை நிறுத்தி, அவசரமாக வெளியேறினர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தை அவசரமாக நிறுத்தியபோது ஏற்பட்ட விபத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 2 மாதங்களில் சீனாவில் நடந்த பெரிய விபத்து இதுவாகும். முன்னதாக, கடந்த மார்ச் 12ம் தேதி, குன்மிங்கில் இருந்து குவாங்ஜூ புறப்பட்ட போயிங் 737 விமானம், டெங்ஜியான் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உள்பட 132 பேர் பலியாகினர்.

Related Stories: