கோயில் திருவிழாக்கள் எதிரொலி ஓசூர் மார்க்கெட்டில் சாமந்தி பூ விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர்: மாவட்டம் முழுவதுமாக சிறு மற்றும் பெரிய கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால், ஓசூரில் சாமந்தி பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் குடில் அமைத்தும், நேரடியாக விளை நிலத்தில் காய்கறி, பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பூக்களை நகரில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 50 டன்னுக்கும் மேல் பூக்கள் விற்பனையாகிறது. மேலும், வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து, 150 டன் வரையிலும் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஓசூர் பூ மார்க்கெட்டிற்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், அதிக அளவில் பூக்களை  வாங்கிச் செல்கின்றனர். தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோயில் திருவிழாக்கள் நடந்து வருவதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இனதால் ஓசூர் மார்க்கெட்டில் சாமந்தி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று சாமந்திப்பூ கிலோ ₹160க்கு விற்பனையானது. மல்லி கிலோ ₹200க்கும், செண்டுமல்லி ₹40, பட்டன் ரோஸ் ₹80க்கும், அரளிப்பூ ₹140, ரோஸ் ₹80க்கும், சம்பங்கி ₹50க்கும் விற்பனையானது. சாமந்தி பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Related Stories: