கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

கும்பகோணம்: கும்பகோணத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.கும்பகோணம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் கும்பகோணம் பெரிய கடை வீதியில் மொத்த பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு குடோன்கள் அண்ணலக்ரஹாரம் பகுதியில் உள்ளது. இதில் பல லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஆய்வு மேற்கொண்டதில் 8 டன் மதிப்புடைய பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இது குறித்து நகர்நல அலுவலர் பிரேமா கூறுகையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சசிகுமார் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்தையன் ஆகியோர் அண்ணலக்ரஹாரம் பகுதியில் உள்ள 2 குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது சந்தேகத்திற்குரிய பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக 2 குடோன்களின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது இங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது கண்டறியப்பட்ட 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும். மேலும் அதன் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தவித உரிமமும் இல்லாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சிமெண்ட் பேக்டரிக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: